அல்குர்ஆன் சட்டப் பகுதியோடு மாத்திரம் சுருங்கிய‌ ஒன்றல்ல. நாம்தான் அதனை பிழையாக புரிந்திருக்கிறோம். சட்டங்களை பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே நாம் அல்குர்ஆன் நோக்கி மீள்வதுண்டு. சட்டப்பகுதி அல்குர்ஆனில் சிறியதொரு பகுதி என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒட்டுமொத்த அல்குர்ஆனும் அதுவல்ல. அல்குர்ஆன் பேசும், ஆனால் நாம் ஆழ்ந்து பார்க்க மறந்துவிட்ட, இன்னும் எத்தனையோ பகுதிகள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானதுதான் “பிரபஞ்ச விதிகள்” எனும் பகுதி. படிமுறை விதி, காலக்கெடு விதி, நாகரிகச் சுழற்சி விதி, எதிர்விசை விதி, வசப்படுத்தல் விதி போன்ற இன்னும் பல பிரபஞ்ச விதிகளை அல்குர்ஆன் எமக்கு கற்பிக்கிறது. அவற்றுள் சிலதை மாத்திரமே இங்கு விளக்குகிறோம்:

1- படிமுறை விதி

படிமுறை விதி என்பது தனிமனித, சமூக விவகாரங்கள் அனைத்தும் இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் கட்டம், கட்டமான வளர்ச்சி எனும் விதிக்குள்ளாலே இயங்குகிறது என்பதாகும். அல்லாஹ் மனிதனை ஒரே நாளில் படைத்திருக்கலாம். ஆனால் படிமுறை வளர்ச்சியினூடாக அதனை ஆக்கி வைத்திருக்கிறான்:

இந்திரியத் துளியை அலக் என்ற நிலைக்கு ஆக்கினோம். பின்னர் அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம். பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம். பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை மனிதன் எனும் வேறு ஒரு படைப்பாக செய்தோம்

(முஃமினூன் 14)

இரு என்றால் இருக்கக் கூடிய வகையில் மனிதனையும் பிரபஞ்சத்தையும் படைக்க சக்தி படைத்த இறைவன் படிமுறை விதியை கையாண்டிருக்கிறான். மனிதன் அவ்விதியை எல்லா கட்டத்திலும் கடைபிடிக்க வேண்டும் என்பது இதனூடாக உணர்த்தப்படுகிறது.

நபியவர்கள் தன் தோழர்களைப் பயிற்றுவிக்கும் போதும் இவ்விதியை கையாண்டிருக்கிறார்கள். முஆத் (ரழி) அவர்களை யெமன் பகுதிக்கு அனுப்பி வைத்த போது பின்வருமாறு உபதேசித்தார்:

வேதம் கொடுக்கப்பட்ட ஒரு சமூகத்திடம் செல்கிறீர்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என சாட்சி கூறல் நோக்கி அவர்களை அழையுங்கள். அவர்கள் அதற்கு கட்டுப்பட்டால் ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுகையை அல்லாஹ் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவியுங்கள். அதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களது வசதிபடைத்தவர்களிடமிருந்து பெறப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும் ஸகாத்தை அல்லாஹ் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவியுங்கள்...

(புஹாரி, முஸ்லிம்)

‘ஹிக்மா’ என்ற சொல்லுக்கு இப்னு அப்பாஸ் (ரழி) கொடுக்கும் விளக்கம் எமது அவதானத்தைப் பெற வேண்டியுள்ளது: “சிறிய விடயங்களை அறிவதிலிருந்து பெரிய விடயங்களை அறிவது வரை மக்களை கூட்டிச் செல்லல்”. மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய விடயங்களைப் பேசுதல் என ஷெய்க் கஸ்ஸாலி ‘ஹிக்மா’ என்ற சொல்லை விளக்குகிறார். நபியவர்களது பின்வரும் ஹதீஸும் மக்கள் தரம் அறிந்து அவர்களை கட்டம் கட்டமாக‌ பயிற்றுவிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது:

"மக்கள் அறியும் விடயங்கள் கொண்டு அவர்களுடன் பேசுங்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் பொய்ப்படுத்தப்படுவதை விரும்புகிறீர்களா?"

(புஹாரி)

இஸ்லாத்தை மக்களிடம் முன்வைக்கும் போது படிமுறை விதி கட்டாயம் கவனத்திற் கொள்ள‌ப்பட வேண்டும். இஸ்லாத்தின் மிக அடிப்படையான பகுதிகளிலிருந்தே மக்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இஸ்லத்தில் மிக அடிப்படை பகுதிகள் இருக்கின்றன. கிளைப் பகுதிகள் இருக்கின்றன. முஹ்கம் (பல கருத்துக்களுக்கு இடம்பாடு இல்லாது, ஒரே கருத்தை தெளிவாகக் கூறும் வசனங்கள்), முதஷாபிஹ் (பல கருத்துக்களுக்கு இடம்பாடான வசனங்கள்) என்ற வகைப்பாடுகள் இருக்கின்றன. இஸ்லாம் பற்றிய மிக ஆரம்ப புரிதல் கொண்ட சமூகத்திற்கு கிளைப்பகுதிகளை விட மார்க்கத்தின் அடிப்படை பகுதிகளையே கூடுதல் கவனம் கொடுத்து கற்பிக்க வேண்டியுள்ளது. அவ்வடிப்படைகளிலிருந்து மெதுமெதுவாக அவர்களை உருவாக்க வேண்டும். உதாரணமாக தொழுகையை எடுத்துக் கொள்ளலாம். தொழுகை இஸ்லாத்தின் மிக அடிப்படையானதொரு வணக்கம். அதில் எவ்வித கருத்துவேறுபாடுமில்லை. தொழுகையை இயந்திரத்தன்மையற்ற, விளைவுகளைப் பெற்றுத்தரக்கூடிய விதத்தில் ஆரோக்கியமானதாக மாற்றக் கூடிய முயற்சிகள் எம் சமூகத்தில் எந்தளவு தூரம் முக்கியம் கொடுக்கப்படுகிறது என்பது மிகப் பெரும் கேள்வியாகும். தொழுகையில் ஓதக் கூடிய சிறிய சூறாக்களையாவது கற்பித்து, பொருளுணர்ந்து ஓதக்கூடிய வகையில் மக்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டங்கள் எந்தளவு தூரம் சமூகத்தில் இடம்பிடித்திருக்கின்றன என்பது இன்னொரு கேள்வி. அன்றாட வாழ்வுக்கு தேவையான ஹதீஸ்களை, அடிப்படை நம்பிக்கை கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை கூட நாம் இதுவரை செய்ததாக இல்லை. இஸ்லாத்தின் மிக முக்கிய பகுதிகளிலிருந்து அடுத்தடுத்த கட்டங்கள் நோக்கி நகரும் வேலைத்திட்டத்தை நாம் மீண்டும் ஆரம்பிக்க வேண்டியுருக்கிறோம்.

 சட்டங்களை அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்த முனையும் அல்குர்ஆன் படிமுறை விதியைப் பிரயோகித்தே அமுல்படுத்தியது. சாராயம் தடைசெய்யப்பட்டதை சிறந்ததொரு உதாரணமாகக் கூறலாம்.  வட்டியை தடை செய்ய அல்குர்ஆன் கையாண்ட படிமுறை விதியை பின்வரும் நான்கு வசனங்களினூடாக புரிந்துகொள்ளலாம்:

மனிதர்களுடைய முதலுடன் சேர்ந்து உங்கள் செல்வம் பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை

(ரூம் 30)

வட்டி வாங்குவது அவர்களுக்குத் (யஹூதிகளுக்கு) தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் காரணமாகவும், தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் காரணமாகவும் இவ்வாறு தண்டனை வழங்கினோம்

(நிசா 160)

ஈமான் கொண்டோரே! இரட்டிப்பாக்கிக் கொண்டு வட்டியை தின்னாதீர்கள்

(ஆல இம்ரான் 130)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், இறைபிரக்ஞை கொண்டு, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்

(பகரா 278)

அன்றிருந்த சூழலை அல்குர் ஆன் கருத்திற் கொண்டது. மக்களையும் அவர்கள் மன‌நிலையையும் கவனத்திற் கொண்டது. அப்பின்புலத்தில் மிகக் கவனமாக மெதுமெதுவாக, கட்டம் கட்டமாக‌ மக்களை மாற்றியமைத்தது.

2- காலக்கெடு விதி

காலக்கெடு விதி படிமுறை விதியுடன் மிக நெருக்கமாக‌ தொடர்புபடுகிற‌து. ஒன்றின் விளைவு இன்னொன்று எனவும் கூற முடியும். ஒவ்வொன்றுக்கும் காலம் வரவேண்டும் எனவும் இதனைக் கூறலாம். எந்தவொரு செயலும் அல்லது வேலைத்திட்டமும் அதற்குரிய காலக்கெடு வரமுன் பூர்த்தியாகி விடுவதில்லை. அதர்குரிய காலம் வரை அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும்.  அல்குர்ஆன் இவ்விதி பற்றி பல இடங்களில் பேசியிருக்கிறது:

"ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு குறிப்பட்ட தவணையுண்டு. அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு மணி நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்"

(யூனுஸ் 49)

ஒவ்வொரு தவணைக்கும் ஒரு ஏடு உள்ளது

(ரஃத் 38)

மறுமையின் வேதனையைப் பற்றி அவர்கள் உம்மை அவசரப்படுத்துகிறார்கள். அதற்கெனக் குறிப்பிட்ட தவணை ஏற்படுத்தப்படாதிருப்பின் அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்கும்.

(அன்கபூத் 53)

இதுபோன்ற இன்னும் பல வசனங்களும் காலக்கெடு விதி பற்றிப் பேசுகின்றன.

விதையை நட்டு ஒரே நாளில் அறுவடை செய்ய முடியாது அதற்கென்று சில நாட்கள் காத்திருக்க வேண்டும். தாயின் வயிற்றில் கருக்கட்டிய மனிதன் உலகை எட்டிப் பார்க்க சில மாதங்கள் தேவைப்படுகின்றன. இவ்வாறுதான் சமூக சீர்திருத்த அல்லது சமூக மாற்ற சிந்தனைகளும். சிந்தனையை முன்வைத்து ஓரிரு நாட்களில் மாற்றம் நிகழ்ந்து விடுவதில்லை. அதற்கென்று காலம் இருக்கிறது. வரலாறு இதற்கான சிறந்த ஆதாரமாகும். நபியவர்கள் அல்லாஹ்வின் மிக விருப்பத்துக்குரிய மனிதராக இருந்தும் அவரது முயற்சிகள் 23 வருடங்களை எடுத்தன. தொடர்ந்து வந்த சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த பள்ளிகளது வரலாற்றைப் படித்துப் பார்த்தால் இவ்வுண்மையை புரிந்துகொள்ளலாம். சிலர் முன்வைத்த சிந்தனைகள் அவர்களது மரணத்தின் பின் வெற்றியடைந்த வரலாறும் உள்ளது. விளைவுகளை மிக அவசரமாக எதிர்பார்ப்பது அல்குர்ஆனின் கருத்துப்படி பிழையானதாகும்.

இவ்யதார்த்தத்தை புரிந்துகொள்ளாதபோதுதான் விரக்தி தோன்றுகிறது. முயற்சிகளுக்கான விளைவுகளை கண்டு கொள்ளாத போது மனிதன் விரக்தியடைந்து விடுகிறான். அவனது முயற்சிகள் கைவிடப்படுகின்றன. அல்குர்ஆன் முன்வைக்கும் காலக்கெடு விதியை சரியாக புரிந்துகொள்பவன் விரக்தியுறப்போவதில்லை. முயற்சிகள் தொடரும். விளைவுகளை நிதானமாகவும் பொறுமையாகவும் எதிர்பார்த்திருப்பான். அதற்குரிய காலம் வரும் வரை அவசரப்படப் போவதில்லை.

 மனிதன் தன் முயற்சியை மிகக் கச்சிதமாக செய்துவிட்டே விளைவுகளை எதிர்பார்க்க வேண்டும். பத்ர் போரில் நிகழ்ந்த அற்புதங்கள் விதிவிலக்கானவை. அதனை விதியாக்கிக் கொள்ளக் கூடாது. விதிவிலக்குகளை விதியாக்கிக் கொண்டு அற்புதங்களை எதிர்பார்த்து, அதில் தங்கியுருக்கும் சமூகம் உலகுக்கு தலைமை தாங்க அருகதையற்றதாகிப் போய்விடுகிறது. தேவையான காரண, காரியங்களை எடுக்காமல் வெறுமனே இறைவனிடம் பிரார்த்திப்பது எம்மை இன்னும் பலவீனப்படுத்தும். காலக்கெடு விதி என தமது பலவீனத்தை மூடிமறைப்பது மடமையின் உச்ச கட்டம் எனக் கூறலாம்.

3- எதிர்விசை விதி

எதிர்விசை விதி என்பது ஒரு சக்தியை, பலத்தை இன்னொரு சக்தி, பலம் எதிர்த்து நிற்றல் எனலாம். இவ்விதி சமூக இயக்கத்துக்கும் உலகம் சீர்கெட்டுப் போகாமலிருக்கவும் அவசியமானது என அல்குர்ஆன் கருதுகிறது:

"அல்லாஹ் மக்களில் சிலரைக் கொண்டு சிலரைத் தடுக்காவிட்டால் பூமி சீர்கெட்டிருக்கும்"

(பகரா 251)

மனிதர்களில் சிலரைக் கொண்டு சிலரை அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்

(ஹஜ் 40).

தனிமனிதனிடத்திலும் சமூகங்களிடத்திலும் இவ்விதி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதனினுள் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இவ்விதியைச் சார்ந்தது. நோய் கிருமிகளுடன் எதிர்த்தியங்கக் கூடிய வகையில் மனித உட்கட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோலதான் சமூக மட்டத்திலும் இவ்விதி தொழிற்படுகிறது. ஓர் அநியாயக்கார ஆட்சியாளன் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதில்லை. அவனை எதிர்க்கும் இன்னோர் ஆட்சியாளன் உருவாகிறான். அவர்களிருவருக்கும் மத்தியில் போட்டி நிலவுகிறது. ஒருவரை ஒருவர் எதிர்க்கின்றனர். பலவீனர்களும் அநியாயமிழைக்கப்பட்டவர்களும் தம்மை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும், பலப்படுத்திக் கொள்வதற்கும் இது வழிவகுக்கிறது. எழுச்சிக்கும் நீதிக்குமான வாயில் திறக்கப்படுகிறது. அநீதியாளர்களின் போட்டியும் சண்டையும் நீதிக்கு வழி வகுக்கின்றன.

 ஈமானுக்கெதிரான சதிகள் அதிகரிக்கும் போது முஃமின்களிடத்தில் எதிர்ப்புச் சக்தியும் நாட்ட சக்தியும் வலுவடைகின்றன. விழித்துக் கொள்கின்றனர். தம் கொள்கையில் உறுதியடைகின்றனர். நன்மையும், நீதியும் வளர்வதற்கு இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு விதி என இதனைக் கூற முடியும். எதிர்ப்பையும் விமர்சனத்தையும் ஒரு சமூகம் மிகக் கவனமாக புரிந்துகொண்டு அதற்கேற்ப தம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ளுமாயின் அது தன்னை மீளொழுங்குபடுத்திக் கொண்டு வளர்ச்சி நோக்கி நகரும். இன்னும் பலப்படும்.

மேற்கூறிய விதிகளை இன்றைய முஸ்லிம்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். அல்குர்ஆனை  சட்டப் புத்தகமாக பார்க்கும் நிலையிலிருந்து வெளியேறி, அல்குர்ஆனை நாகரீகமொன்றுக்கான மூலாதாரம் எனும் நிலையில் புரிந்துகொள்ளக் கூடியவர்களாக மாறுவதற்கான எட்டுக்களை எடுத்து வைப்பதுதான் முஸ்லிம்களாகிய நாம் இன்று செய்ய வேண்டியது எனலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version