ஷெய்க் அஹ்மத் ரைசூனி

மொழிபெயர்ப்பு -ஷெய்க் ஷாகிப் அப்துல் ஹலீம்

இமாம்களான புகாரியும் , முஸ்லிமும்  நீண்டதொரு ஹதீஸில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதை அறிவித்துள்ளனர்:- குறைஷிக் கூட்டத்தவர்களான நாங்கள் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஓர் சமூகமாக இருந்தோம். நாம் மதீனாவுக்கு வந்தபோது பெண்கள் மேலாதிக்கம் செலுத்துகின்ற ஒர் சமூகத்தை கண்டோம் .எமது பெண்கள் மதீனா பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ளலானார்கள். ஒரு நாள் நான் என் மனைவி மீது கோபம் கொண்டேன். உடனே அவள் என்னை எதிர்த்துப் பேசினாள். நான் என்னை எதிர்த்துப் பேசுவதை தடுத்தேன். “நான் உங்களை எதிர்த்துப் பேசுவதை ஏன் தடுக்கின்றீர்கள்? என்று கேட்டாள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் அவரை எதிர்த்துப் பேசுகின்றனர். அவர்களில் ஒருவர் நாள் முழுதும் அவரை  புறக்கணிக்கின்றார்” என்று கூறினாள். எனவே நான் உடனே சென்று (அவரது  மகள்) ஹப்ஸாவை  சந்தித்தேன். அல்லாஹ்வின் தூதரை எதிர்த்துப் பேசுகின்றீர்களா? என்று கேட்டேன். ஆம் என்று கூறினார் . உங்களில் ஒருவர் அவரை நாள் முழுதும் புறக்கணிக்கின்றீர்களா? என்று கேட்டேன். “ஆம்”என்று கூறினார். அப்படியாயின்   உங்களில் இதை செய்தவர்  நஷ்டம் அடைந்து விட்டார்! நாசம் அடைந்து விட்டார்! அல்லாஹ்வின் தூதரோடு கோபம் கொண்டதற்காக அல்லாஹ் அவரோடு  கோபம் கொள்வான், அதன் காரணமாக அவள் அழிந்து விடுவாள் என்ற நம்பிக்கை அவளுக்கு இருக்கிறதா? நீ அல்லாஹ்வின் தூதரை எதிர்த்துப் பேசாதே! அவரிடம் எதையும் கேட்காதே! உனக்கு தோன்றுவதை என்னிடம் கேள்………… என்று நான் கூறினேன்.

இந்த ஹதீஸ் பல விடயங்களை சுட்டிக்காட்டுகின்றது:-

1. மக்காவாசிகளான குறைஷிகளிடத்தில் இல்லற பந்தமானது  பெண்கள் மீதான ஆண்களின் மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.   ஆணே தீர்மானம் எடுப்பவனாக இருந்தான். அவனே அந்தஸ்து மிக்கவனாக திகழ்ந்தான். அவனது குரல், பெண்ணின் குரலை  விட ஓங்கியிருந்தது.எதனை செய்ய வேண்டும், எதனை விட்டு விடவேண்டும் என்பதை அவனே முடிவு செய்தான். பெண்ணுக்கு அதில் தலையீடு செய்ய முடியாதிருந்து.

2. மதீனாவாசிகளிடத்தில் இவ்விடயம் இதற்கு நேர்மாறானதாகவிருந்தது . அன்சாரிப்  பெண்கள் ஆண்கள் மீது  ஆதிக்கம் செலுத்தினர்.   அல்லது அன்சாரிகள் தமது பெண்களிடம் ஆதிக்கத்தை விட்டுவிட்டார்கள் என்று கூறலாம் . எனவே அவர்களுக்கென ஓர் உயர் அந்தஸ்து இருந்தது. அவர்களது கருத்துக்கள் செவிசாய்க்கப்பட்டன. தமது கணவன்மார்களிடம் அவர்களுக்கு  செல்வாக்கு இருந்தது. புகாரியின் ஒர் அறிவிப்பில் இருப்பது  போல, “அன்சாரிப் பெண்களின் பண்பாடு” என்று உமர் விவரித்த நடத்தை இதுவாகும். மதீனத்து அன்சாரி பெண்களுக்குரிய இந்த மதிப்புமிகு அந்தஸ்தின் காரணமாக, வெட்கம், கூச்சம், சங்கடம் மிக்க விவகாரங்களில் புதிய மார்க்கத்தின் தீர்ப்புகளை கேட்பதிலும் ஆராய்வதிலும் அவர்களது துணிவின் மூலம்  அன்சாரிப் பெண்கள் தனித்துவம் பெற்று விளங்கினர். இதோ குறைஷியரான, இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே, அன்சாரிப்  பெண்களை பற்றி சாட்சி பகர்கின்றார் : “அன்சாரிகளின் பெண்கள் எவ்வளவு நல்ல பெண்கள்; அவர்களின் கூச்சம் மார்க்கத்தை பற்றி கேட்பதற்கும் அதைப் பற்றி ஆழ்ந்த விளக்கம் பெறுவதற்கும் அவர்களைத் தடுக்கவில்லை”.

3. மதீனாவிற்கு இடம்பெயர்ந்த குறைஷிப் பெண்கள், அன்சாரிப் பெண்களின் மூலம் தாக்கமுறலாயினர். அவர்களை பின்பற்றத் தொடங்கினர். ஒரு வகையான ஆதிக்கம் அல்லது எதிர்ப்பை கடைப்பிடிப்பதினூடாக கருத்துக்கள், முடிவுகள் மற்றும் நடத்தையில் தங்கள் கணவருக்கு நிகராக நின்றனர்.

4. அல்லாஹ்வின் தூதரின்,  மனைவிமார்களுடான நடத்தையும் உறவும்  அன்சாரிகளின் முறைப்படியும் “அன்சாரிப் பெண்களின் பண்பாடு” க்கு ஏற்பவும் இருந்தது. அல்லது இன்னும் சரியாகச் சொல்வதானால்,  அன்சாரிகளதும் அன்சாரிப் பெண்களினதும் பண்பாடு, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கொண்டு வந்த வழிகாட்டுதலுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பவே இருந்தது.  அவரது மனைவிமார்கள் அனைவருக்கும்  அவரோடு கலந்தாலோசிப்பதற்கும்; அவரது கருத்து, நடத்தை தொடர்பாக மாற்றுக் கருத்து சொல்வதற்கும்; கோபம், வெறுப்பை அல்லது பதிலளிக்கப்படாத கோரிக்கைக்காக அதிருப்தியை வெளிகாட்டும் வகையில்  பகல் முழுதும் அவரை புறக்கணித்து நடப்பதற்கும் அவர் அனுமதித்ததோடு, பொறுத்தும் கொண்டார்.

5. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி, நபி அவர்களின் முன்மாதிரியையும் மதீனாவின் முன்மாதிரியையும் பின்பற்றிநடக்கலானார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியும் தனது மகளுமான ஹப்ஸாவிடமிருந்து தான் கேள்விப்பட்டவற்றை அதற்கு ஆதாரமாகக் கொண்டார். அதன் காரணமாக அவர் ஊக்கமடைந்து, உமரின் விவகாரங்களில் – அவர் கடும் போக்கிற்கு பெயர்பெற்றவர் – அவள், அவர்  மீது கோபம் கொண்டு, சப்தமிட்டு  அவரை எதிர்த்துப் பேசுவதற்கு முன் வந்தாள்.

பொதுவாக நாம் கூற முடியும்:- பெண்களை அணுகுவதில் நபிகளாரின் வழிமுறை; மரியாதை செலுத்துதல், கண்ணியப்படுத்துதல், சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொள்ளுதல் என்பவற்றின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுடான அன்சாரிகளின் பண்பாடும் அவ்வாறுதான் காணப்பட்டது. நபிகளாரின் வழிமுறைக்கு ஏற்பவே  அது அமைந்திருந்தது. இது  பெண்கள் மீதான ஆண்களின் மேலாதிக்கம் நிலவி வந்த அரபு சூழலில் பெண்களை அணுகுவதில் ஓர் மடைமாற்றத்தை ஏற்படுத்தியது.

மாறாக, பெண்களின் மீது ஆண்களின் ஆதிக்கமும்  ஆக்கிரமிப்பும்  பண்டைய மற்றும் நவீன காலங்களில் அனைத்து சமூகங்களிலும் மக்களிடையேயும் நிலவும் எளிதான சூழ்நிலையாகும். இதில் எவ்வித சிறப்போ, தனித்துவமோ, உயர்வோ இல்லை. மாறாக சிறப்பு, தனித்துவம், உயர்வு ஆகியவை எதிர்நிலையில் அடையப்படுகின்றன. அதனால்தான் இஸ்லாம் வந்து மக்களை அதன்பால் நகர்த்தியது. சிறப்பு, தனித்துவம், உயர்வு  இருப்பவற்றை நோக்கி பயிற்றுவித்தது. ஆணாதிக்கத்தை வழக்காகாக் கொண்ட தனி மனிதனுக்கோ,  அதிலிருந்து வெளிவருவது எளிதானது அல்ல. இது உமரின் நிலைப்பாட்டிலும் அவர் தனது சமூகத்தை பற்றியும் தன்னைப் பற்றியும் கூறியவற்றிலும் தெளிவாகிறது. எனவே அவர் இறைத்தூதருக்கும் அவரது மனைவிமார்ளுக்கும் இடையே நிலவும் உறவு முறையின் யதார்த்தத்தை அறிந்தபோதும், அவரது மனைவி (ஆத்திகா) தனது வாக்குவாதத்தின் வலிமையால் அவரை “தோற்கடித்தபோதும்”, அந்த விடயத்தை அவர் ஜீரனிக்கவில்லை.

குறிப்பாக, தனது மகள் தங்கள் இல்லற வாழ்வில் கூட, அல்லாஹ்வின் தூதரை விமர்சிக்கவும் கோபப்படுத்தவும் துணிவதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

உமர்  பின் கத்தாபின் மனைவியான ஆதிகா பின்த் ஜைத் பின் அம்ர் பின் நுஃபைலிடமிருந்து  இமாம் மாலிக் தனது முவத்தாவில்  அறிவித்துள்ளார்- அவர் மஸ்ஜிதுக்கு செல்ல உமர் பின் அல்-கத்தாபிடம் அனுமதி கேட்பார். அவர் அமைதியாக இருப்பார்.  அதனால் அவள் கூறுவாள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் என்னைத் தடுக்காவிட்டால் நான் வெளியேறிச் செல்லுவேன்”. அவர் அவளைத் தடுக்கவில்லை.  அவர் கடைபிடிக்க ஆரம்பித்த புதிய தர்க்கமாகவும் நடத்தையாகவும் அது இருந்தது. வலிமையையும் கடுமையும்கொண்டு பிறரை மிகைப்பதற்கு  பதிலாக நீதியுடனும் கருணையுடனும் மிகைப்பதற்கு  மக்களுக்குக் கற்பிக்கின்றது. 

சிறப்பின் அளவுகோல்

இந்தமாற்றத்தையும், அதன் பெறுமானங்கள் மற்றும் அதன் கலாச்சாரத்தையும் உறுதிப்படுத்தும்  வகையில், ஆயிஷாவின் ஹதீஸையும் நாங்கள் காண்கிறோம்: அல்லாஹ்வின் தூதர் –  – கூறினார்:  “உங்களில் சிறந்தவர் அவருடைய குடும்பத்திற்கு சிறந்தவர், நான் என் குடும்பத்திற்கு உங்களில் சிறந்தவன்”. சிறந்தவர், நல்லவர் என்பதற்கான அளவுகோல் ஒரு நபர் தனது குடும்பத்தை, அதாவது அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரை நடத்துவதில் தான் உள்ளது. மார்க்கத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர், தனது குடும்பத்தை சிறப்பாக நடத்துபவர்; தனது குடும்பத்துடன் நல்ல முறையில் நடந்து  கொள்பவரே. 

இந்த ஹதீஸ்  ஒரு சீர் கெட்ட சமூகச் சூழலைக் குறிக்கிறது.என்றாலும் அதுதான் தற்போது  நிலவிக்கொண்டிருக்கிறது. நண்பர்களுடான, தோழர்களுடனான உறவுகளில் குறிப்பிடத்தக்க அளவு நன்னடத்தையுடனும் நல்லொழுக்கத்துடனும் பழகும்  பல மனிதர்களை காண்கிறோம். நீங்கள் அவர்களிடம் நிறைய மென்மை, மகிழ்ச்சி, பணிவு, ஒழுக்கம்,விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் காண்பீர்கள். ஆனால் அவர்கள் தமது குடும்பத்துடனும், வீட்டுக்குள்ளும் இதற்கு மாற்றமாக இருப்பதைக் காண்பீர்கள்.

பல ஆண்கள் இன்னும் தங்கள் விருப்பங்களையும்,எதேச்சை அதிகாரத்தையும் ,கடுமையையும்  பெண்கள் மீது திணிப்பதை  தங்கள் முழு ஆண்மையினதும் குடும்ப நிருவாகத்தினதும  ஒரு பகுதியாக   நம்புகிறார்கள். அவர்களது கருத்துக்களோடு முரண்படக்கூடிய பெண்ணின் கருத்துக்களை கவனத்தில் கொள்வதும், அவளது விருப்பங்களுக்காக அவர்களது விருப்பங்களை விட்டும் இறங்கி வருவதும், அவள் மீது இரக்கம் காட்டுவதும்  அவர்களின் ஆண்மைக்கும் அந்தஸ்துக்கும் பொருந்தாத குறைபாடு, பலவீனம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதற்காகவும் இவர்களுக்காகவும் தான் நபி அவர்கள் கூறினார்கள்: “உங்களில் சிறந்தவர் அவருடைய குடும்பத்திற்கு சிறந்தவரே, நான் என் குடும்பத்திற்கு சிறந்தவன்.” 

எவ்வாறாயினும்,   எமது இஸ்லாமிய சமூகங்களில் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டுவருகின்ற எமது அழகிய ஒழுக்க மரபுகளின் எச்சங்கள் சிலவற்றில் ஒன்றுதான்: உதவி, உபகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பது. உதாரணமாக – இதனை நாம்  சனநெரிசலில், காத்திருக்கும் சூழ்நிலைகளில், ரயில்கள், பேருந்துகள் மற்றும் அதுபோன்றவற்றில் அமர்வதற்கு ஓர் இருக்கை தேவைப்படும் வேளையிலும்,கடைகளில் பொருட்கள் கொள்வனவுசெய்யும் வேளையிலும் கண்டுகொள்கின்றோம்.

இந்த கண்ணியமிகு நடத்தைக்கான அடிப்படை  நபிமார்களின் வழிமுறைகளில் உள்ளது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி அல் குர்ஆன் கூறுவது போல:-*((அவர் (மூஸா) மத்யன் நகரிலுள்ள ஓர் கிணற்றின் அருகே வந்த போது அங்கு ஓர் மக்கள் கூட்டத்தை கண்டார். அவர்களைத் தவிர தடைபட்டிருக்கும் இரு பெண்களையும் கண்டார். உங்கள் இருவரது விடயம் என்ன? என்று கேட்டார். இடையர்கள் வெளியேறும் வரை எமக்கு தண்ணீர் புகட்ட முடியாது. எமது தந்தையோ ஒரு பெரிய முதியவராக இருக்கின்றார் என்று கூறினார்கள். எனவே அவர் ( மூஸா) அவர்களுக்கு தண்ணீர்புகட்டிக் கொடுத்தார். பிறகு நிழலின் பக்கம் திரும்பி “என் இரட்சகனே! நீ எனக்கு இறக்கிவைத்த நலவுகளுக்கு நான் தேவை உடையவனாகவே இருக்கின்றேன்.))* ( கஸஸ் : 23 -24)

The views and opinions expressed in this article are those of the author and do not necessarily reflect the official policy or position of rishardnajimudeen.com.

Share.
Leave A Reply

Exit mobile version