முஸ்லிம்களின் சிந்தனை முறைமைகளை வகைப்படுத்துவதில் நவீன இஸ்லாமிய அறிஞர்கள் வித்தியாசமான சொல்லாடல்களைப் பயன்படுத்துகின்றனர். அம்முறைகளில் ‘நவீன சலபிய சிந்தனை முறைமை’ பலரதும் கவனத்தை பெற்றிருக்கின்றது. இப்போக்கு கொண்டோரை ‘வாக்கியவாத அணுகுமுறை’ (ழாஹிரிய்யா) கொண்டவர்கள் என சிலர்அடையாளப்படுத்துகின்றனர். அச்சிந்தனை முறைமை பல படித்தரங்களை கொண்டுள்ளது. அவர்களுள் கடும்போக்குவாத மற்றும் தீவிர சிந்தனை முகாம்களும் உள்ளன. அவற்றை சிலர்அடிப்படைவாதிகள் என்பர். இன்னும் சிலர் ஆயுத பயங்கரவாதிகள் என்பர். சிலர் ரெடிகள்வாதிகள் என்பர். சிலர் மத வெறியர்கள் என்பர். வித்தியாசமான சொல்லாடல்களால் அடையாளப்படுத்தப்படும் இத்திவிரவாத சிந்தனை முகாமை காலித் அபூ பழ்ல் “தூய்மைவாதசிந்தனை போக்குகொண்டோர்” (Puritans) என அழைக்கிறார்.
தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோர் சார்ந்த உரையாடலை முன்னெடுத்தவர்களுள் பேராசிரியர் காலித் அபூ பழ்ல் முக்கியமானவர். அச்சிந்தனை முறைமை பற்றிய அவரதுகருத்துக்களை பின்வரும் நான்கு தலைப்புக்களில் இக்கட்டுரை உரையாட விரும்புகிறது:
- தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோரது மனோநிலையும் காலித் அபூ பழ்லுடையவிமர்சனமும்
- தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோர் இஸ்லாமிய சட்டப்பகுதிய அணுகுவதிலுள்ள சிக்கல்கள்
- ஷரீஆவின் இலக்குகளினூடான தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோரது விளக்கங்களை கேள்விக்குற்படுத்தும் காலிதுடைய போக்கு
- பெண்கள் உரிமை, மதங்களுக்கிடையான கலந்துரையாடல், ஜனநாயகம் போன்ற கருத்தாக்கங்களில் காலிதின் சிந்தனைகள்
தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோர் என்ற சொல்லாடலை தனது எழுத்துக்களில் பிரயோகிக்கும் பேராசிரியர் காலித் குவைத் நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர். UCLA சட்டக்கல்லூரியில் பேராசிரியராக கடமையாற்றும் காலித், அங்கு சர்வதேச மனித உரிமைகள், இஸ்லாமிய சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், இஸ்லாமும் மனித உரிமையும், அரசியல் குற்றங்களும் சட்டவமைப்பும் போன்ற பாடங்களில் விரிவுரையாற்றி வருகிறார். அதேநேரம் மனித உரிமைக்கான சமூக செயற்பாட்டாளராகவும் அமெரிக்காவில் இயங்கிவருகிறார். நவீன இஸ்லாமிய சிந்தனையை வளர்த்தெடுப்பதிலும் அதனை சர்வதேசஉரையாடலின் மையநீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்கும் உழைத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோரது மனோநிலையும் காலித் அபூ பழ்லுடைய விமர்சனமும்
பேராசிரியர் காலித் தனது எழுத்துக்களில் தீவிரவாத சிந்தனைகளை முன்வைப்பவர்களதும் கடும்போக்குவாத சிந்தனைகளை முன்வைப்பவர்களதும் மனோநிலையை ‘வெளித்தள்ளும்மனோநிலை’ (Exclusivist), ‘சகிப்புத்தன்மையற்ற மனோநிலை’ (Intolerant) என்று வர்ணிப்பார். அம்மனோநிலை இஸ்லாமிய தூதுடன் முரண்படுவதாக வாதாடும் காலித் அம்மனோ நிலைமுஸ்லிம் உலகில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கருதுகிறார்.
தூய்மைவாத இயக்கங்கள் தமது செயற்பாடுகளை ‘அதிகாரம் பற்றிய கருத்தியல்’ (Theology of Power) கொண்டு நியாயம் காண்கின்றன. காலணித்துவம், அதன் மோசமான விளைவுகள் மீதான கடுமையான விமர்சனம் கொண்டிருக்கும் இவ்வமைப்புகள், பிரதியீடான ஓர் அதிகாரதலைமைத்துவ கட்டமைப்பை காட்ட முயற்சிக்கின்றன. மேற்கையும் அதன்நிறுவனங்களையும் எதிர்த்தல் என்பதனூடாக தமது அதிகாரத்தை முஸ்லிம்கள் மத்தியில்வேரூன்றச் செய்வதுடன் மேற்குக்கான பிரதியீட்டை தமது தலைமைத்துவம் முன்வைப்பதாகவாதாடுகின்றனர். 9/11 பென்டகன் தாக்குதல், தாலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட புத்தசிலை தகர்ப்பு போன்றன இப்பின்னணியை கொண்டன. எக்கட்டத்திலும் மேற்குடன் உடன்பட்டுச் செல்ல முடியாது என வாதாடும் அவ்வியக்கங்கள் மேற்கு & இஸ்லாம் என்ற முரண்பாட்டுக் கோட்பாட்டுடனே அனைத்தையும் அணுகுகின்றன.
இச்சிந்தனை முறைமையை காலித் அபூ பழ்ல் மறுக்கிறார். ‘நல்ல இலக்குகள் கெட்டவழிமுறைகளை நியாயப்படுத்தாது’ என்ற இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டவிதியினூடாக அவர்களது வாதங்களை கேள்விக்குட்படுத்துகிறார். அநியாயமாக கொலை செய்தலும், பூமியில் அநியாயம், அட்டூழியம் செய்வதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது எனவும் கருதுகிறார். அவர்களது மனோநிலை இறைதூதரது சீராவுக்கும் முரண்படுகிறது எனவும் கருதுகிறார். அவர்களது சிந்தனை முறைமை இஸ்லாம் வலியுறுத்திய அடிப்படைபெறுமானங்களுக்கு முரண்படுவதாக கருதும் அவர், தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோர் இஸ்லாத்தின் பண்பாட்டு, விழுமிய அடிப்படைகளுக்கு முரண் படாததொரு’அரசியல் முறைமை’ (Political methodology) ஒன்றை கைக்கொள்ள வேண்டும், அவர்களது அதிகாரம் பற்றிய கருத்தியலை கைவிட வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கிறார்.
தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோர் இஸ்லாமிய சட்டப்பகுதிய அணுகுவதிலுள்ள சிக்கல்கள்
தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோர் தமது கடும்போக்கு சிந்தனைகளுக்கான நியாயங்களை முன்வைக்க அல்குரான், சுன்னாவிலிருந்து ஆதாரங்களை காட்டுகின்றனர். அவர்களது ஆதாரம் முன்வைக்கும் இப்போக்கு ‘ஒழுங்குமுறையற்றது’ (Unsystematic) மர்றும் ‘சந்தர்ப்பவாதம் கொண்டது’ (Opportunistic) என காலித் வாதாடுகிறார். அல்குரான், சுன்னாமுதல் மூலதாரம் என்பதில் எந்த முஸ்லிமும் கருத்து வேறுபாடு கொள்வதில்லை. ஆனால்அவற்றை அணூகும் முறைமையில் வித்தியாசமான போக்குகள் காணப்படுகின்றன எனபதை ஏற்கும் காலித், தூய்மைவாத சிந்தனை போக்கு கொண்டோர் அம்மூலாதாரங்களை அணுகுவதில் எவ்வித விஞ்ஞானபூர்வமான முறைமையையும் கைக்கொள்வதில்லை எனவிமர்சிக்கிறார். அவர்களுக்கென்று ஒரு முறைமை இல்லை, அவர்கள் தமது முன்முடிவுகளுக்கு ஏற்ப அக்கருத்தை அல்குரான், சுன்னாவினூடாக பலப்படுத்த விரும்புகின்றனர். எதிரியை தாக்குவதற்கும் தமது ஏற்கனவே எடுக்கப்பட்ட கருத்தை பலப்படுத்தவுமே மூலாதாரங்களை கைக்கொள்கின்றனர் எனவும் காலித் விமர்சிக்கிறார். ஆதாரங்கள் மீதான அவர்களுடைய அணுகுமுறை அடுத்தவனை தாக்குவதாகவே இருக்கும். அவர்களது ஒட்டுமொத்த செயற்பாடுகளும், ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதாரங்களை வீசி தாக்குதல் என்பதாகவேஇருக்கும் எனவும் கருதுகிறார்.
ஆதாரங்களை அணுகுவதில் அவர்களிடமிருக்கும் சிக்கல்களை விளக்க அவர்கள் பிரயோகிக்கும் ‘நஸ்க்’ (Abrogation) என்ற கருத்தாக்கமே போதுமானதாக இருக்கும். தமது கருத்துக்கு முரணாக அல்குரான் வசனம் அல்லது ஹதீஸ் வரும் போது அவற்றை மன்ஸூஹ் செய்யப்பட்ட வசனம் அல்லது ஹதீஸ் எனக் கூறுகின்றனர். அவர்கள் நாஸிஹ், மன்ஸூஹ்கோட்பாட்டை பக்கச்சார்பாக அணுகுகின்றனர். உதாரணமாக சூரா ஆல இம்ரானின் 85ம் வசனத்தை ஆதாரம் காட்டி அல்குரானில் வரும் அமைதி, சமாதானம், போர் நிறுத்தம், வன்முறைமை தவிர்த்தல், இஸ்லாத்தை ஏற்காதவர்களோடு நல்ல முறையில் நடத்தல் பற்றிவரும் வசனங்களை மன்ஸூஹ் செய்யப்பட்டதாக வாதாடுகின்றனர். அவர்கள் தூது மீதான ஒட்டுமொத்த பார்வையை செலுத்தாமல் தமது ஆதங்கள், ஏமாற்றம், அபிலாசைகளை இறைவசனங்களில் வாசிக்கவும் விளக்கம் கொடுக்கவும் முனைகின்றனர் என காலித் அபூ பழ்ல்கருதுகிறார்.
அல்குரான், சுன்னா மீதான அவர்களது விளக்கத்தில் இன்னோர் சிக்கலும் இருக்கின்றது. அவர்கள் தமது விளக்கத்தை பூஜிக்கின்றனர். அடுத்தவர்களது விளக்கங்களை பிழையாகக்கருதுவதுடன் அவற்றை எக்கட்டத்திலும் கலந்துரையாட விரும்புவதில்லை. தூய்மைவாதசிந்தனை போக்கு கொன்டோர் மூலாதாரங்கள் மீதான தமது வியாக்கியானத்துக்கு இறைவனின் வார்த்தை (Word of God) அளவுக்கு அந்தஸ்த்து கொடுக்கின்றனர். அதனூடாக ‘எதேச்சதிகாரபோக்கு’ (Authoritarian tendency) ஒன்றை கட்டமைக்க விரும்புகின்றனர். இது வரலாற்றில் இஸ்லாமிய அறிஞர்கள் கட்டி, உருவாக்கிய அறிவுப்பாரம்பரியத்துக்கு முற்றிலும் முரணானபோக்கு கொண்டது என காலித் வாதாடுகிறார். வரலாற்றில் தோன்றிய புத்தக தொகுப்புகள் எண்ணிலடங்காதவை. ஒன்றுக்கொன்று முரன்பட்ட சிந்தனைகள் ஏக காலத்தில் தோற்றம்பெற்றன. ஒருவரை ஒருவர் அங்கீகரித்தனர். முரன்பட்டவர்களோடு உரையாடினர். கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். யாரும் தனது புரிதலை முற்றுமுழுதாக சரியானது எனக்கூறிக்கொள்ளவில்லை. அடுத்தவரது கருத்து, வாசிப்பு, அணுகுமுறை முற்றிலும் பிழையானதுஎன ஒதுக்கித் தள்ளிவிடவில்லை. மாற்றமாக அவர்கள் அறிவடக்கத்தை (Intellectual Humility)கைக்கொண்டனர். அவர்கள் தமது சிந்தனை முன்வைப்பின் இறுதியில் ‘அல்லாஹ்வே மிகச்சரியானதை அறிந்தவன்’ என எழுதும் பழக்கம் கொண்டிருந்தனர். அடுத்தவர்களை ஏற்கும் இவ்வறிவடக்க பாரம்பரியத்துக்கு முரனான போக்கையே தூய்மைவாத கொள்கைகொண்டோர் பின்பற்றுகின்றனர் என காலித் கருதுகிறார்.
வரலாற்றில் இஸ்லாமிய அறிஞர்கள் பின்பற்றி வந்த அடுத்தவர்களை அங்கீகரிக்கும்பன்மைத்துவ சிந்தனைய அவர்கள் உடைத்தெரிய முனைகின்றனர், இஜ்திகாதில் சரியானமுடிவுக்கு இரு நன்மைகளும் பிழையான முடிவுக்கு ஒரு நன்மையும் வழங்கப்படும் எனும்கருத்துக்கு அவர்கள் பிழையான நடைமுறை விளக்கம் வழங்குகின்றனர் எனவும் அவர்கருதுகிறார்.
இறைவனின் பெயரால் பேசுவதற்கு (Speak in the name of God) பேராசிரியர் காலித் ஐந்து நிபந்தனைகளை முன்வைக்கிறார். நேர்மை (Honesty), தொடர் முயற்சி (Diligence), முழுமையான புரிதல் (Comprehensiveness), நியாயத்தன்மை (Reasonableness), சுய கட்டுப்பாடு (Self-restrain) ஆகிய ஐந்து பண்புகளையும் இறைவனின் வார்த்தைகளுக்கு வியாக்யானம் கொடுக்க முனைபவர் பெற்றிருப்பது அவசியமானது. இறைவனின் பெயரால் பேச முனைபவர் கருத்துக்களை திரிபுபடுத்தாத வகையிலும் கருத்துக்களை ஏற்கனவே எடுத்த தனது முடிவுகளுக்கு ஏற்ப வலைக்காத வகையிலும் நியாயமானவராக இருக்க வேன்டும். உண்மையை கண்டுபிடிக்கும் இப்பயணத்தில் தன் முழுமையான சக்தியையும் அறிவாற்றலையும் பிரயோகிக்கக் கூடிய தொடர்முயற்சி கொண்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்டதொரு விடயதானத்தில் அது பற்றிய அல்குரான், சுன்னாவுடைய எல்லா மூல வாக்கியங்களையும் திரட்டி, எந்தவொரு வாக்கியமும் புறக்கணிக்கப்படாத விதத்தில் முழுமையான புரிதலைகொண்டதாக விளக்கம் இருக்க வேண்டும். சில வாக்கியங்களை எடுத்து, இன்னும் சிலதை புறக்கணிக்கும் போக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. முரண்பாடாக தோன்றும் வாக்கியங்களை விஞ்ஞானபூர்வமாக விளக்குவது அவசியம். விளக்கங்களுக்கு இஸ்லாமிய சட்டவாக்கமுறைமையில் நியாயத்தன்மை காணப்பட வேண்டும். இறுதியாக தான் அடையும் முடிவு இறைவன் கூறியது என உறுதியாக யாராலும் கூறிவிட முடியாது. பிழையாக வியாக்கியானம் கொடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து, சுயகட்டுப்பாட்டுடன் ‘இறைவனே மிகச் சரியானதை அறிகிறான்’ என்ற வார்த்தைகளுடன் முடிவுக்கு வருவதே பொறுத்தமானது. இவ் ஐந்து நிபந்தனைகளில் ஏதாவது ஒன்று புறக்கணிக்கப்படும் போது அங்கு ‘வியாக்யான சர்வாதிகாரவாதம்’ (Interpretive Authoritarianism) தோற்றம் பெறுகிறது.
ஷரீஆவின் இலக்குகளினூடான தூய்மைவாத சிந்தனை போக்கு கொண்டோரது விளக்கங்களை கேள்விக்குற்படுத்தும் காலிதுடைய போக்கு
இஸ்லாமிய அறிஞன் ‘ஷரீஆவின் அதி உயர் இலக்குகள்’ (Higher objectives of Shariah) எனும் சட்ட்முறைமையில் ஆழ்ந்த பரீட்சயம் கொண்டவராக இருக்க வேண்டும் என காலித்கருதுகிறார். அவ் ஆழ்ந்த பரீட்சயம் அல்குரானிய தூதின் ஒட்டுமொத்த கருத்துடன் ஒத்துச்செல்வதற்கும் முரண்படாது பயணிப்பதற்கும் உதவுவதாக அமையும் என அபிப்பிராயப்படுகிறார். பேராசிரியர் காலித் அபூ பழ்ல் மகாசிதுஷ் ஷரீஆவை வித்தியாசமான மூன்று தளங்களில் பிரயோகிக்கிறார்:
- தனிமனித, சமூக ‘நலன்கள்’ (Theory of Interests) எனும் கோட்பாட்டை வலியுருத்துவதுடன் அக்கோட்பாட்டின் பின்னணியில் மனித உரிமை சார்ந்த உரையாடலை நகர்த்திச் செல்லல். இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைத்திருக்கும் மார்க்கம், வாழ்வு, அறிவு, பரம்பரை, மானம், சொத்து ஆகிய 6 ஷரீஆவின் இலக்குகளையும் மனித உரிமை கலந்துரையாடலின் ஆரம்ப எட்டாக அவர் கருதுகிறார். எனினும் முஸ்லிம் சமூகம் அவற்றை இன்னும் வள்ர்த்தெடுக்க வேண்டியுள்ளது. நவீன காலத்துக்கு ஏற்ற விதத்தில் இஸ்லாமிய அடிப்படை பெறுமானங்களினூடாக மனித உரிமைகளை பாதுகாக்கும் சட்டகமொன்று அவர்களால் உருவாக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாக வலியுருத்திக் கூறுகிறார்.
- ஷரீஆவின் அதி உயர் இலக்குகளில் புதிய சில பெறுமானங்களை இணைத்தல். பாரம்பரிய இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைத்திருக்கும் ஆறு அடிப்படை விடயஙகளுடன் இன்னும் சில பெறுமானங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றகருத்தை காலித் பல இடங்களில் வலியுருத்தி வருவதுடன், அவை மனிததொடர்பாடலில் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வாதாடுகிறார். சமத்துவம், நீதி ஆகிய இரு பெறுமானங்களையும் அடைய முஸ்லிம் சமூகம் முயற்சி செய்யவேண்டும். அதேபோல அடுத்த சமூகங்களுக்குள்ளாலும் அவ்விரு பெறுமானங்களை வளர்த்தெடுக்க முயற்சிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
- மார்க்க, பண்பாட்டு இலக்குகளை அடைதல். ஏற்கனவே கூறிய ஷரீஆவின் அதி உயர் இலக்குகளுடன் சேர்த்து ‘இறைவனை சார்ந்திருத்தல்’ (Godliness) எனும் கருத்தாக்கத்தையும் பேராசிரியர் காலித் அதிகம் வலியுருத்துகிறார். ‘இறைவனை சார்ந்திருத்தல் என்பது இறைவனின் பண்புகளை எடுத்து நடத்தல், மனித வாழ்வில் அவற்றுக்கு நடைமுறை அர்த்தம் கொடுத்தல் என விளக்குகிறார். கருணை (Mercy), நீதி (Justice), நற்குணம் (Goodness), தயவு (Compassion), அழகு (Beauty) போன்றபண்புகள் மிக முக்கிய இலக்குகளாக மாற்றமுற வேன்டும் எனக் கருதுகிறார். அல்லாஹ்வை ஏற்ற ஒருவனது இவ்வாழ்வின் இறுதி இலக்கு இறைவனது பண்புகளைஅணிகலனாகக் கொள்வது, பின் அடுத்தவர்களுக்கு எத்திவைப்பது, பின் நல்லவிடயங்களுக்கு இணைந்து பணியாற்றலும் தீய விடயங்களில் தவிர்ந்திருந்து எதிர்த்தல், அதாவது பூமியை சீரழிப்பதை எதிர்த்தல் என மேலும் விளக்குகிறார். சமத்துவமின்மை, அநீதி, அடக்குமுறை, பெண் வெறுப்பு போன்ற இஸ்லாமிய விழுமியங்களுக்கு முரணான விதத்தில் அல்குரானை, சுன்னாவை விளக்க முட்படும் வியாக்கியானங்களை நிராகரிக்கும்படி பேராசிரியர் காலித் அழைப்புவிடுக்கிறார்.
இவ்வைகயாக மூன்று தளங்களில் ஷரீஆவின் அதி உயர் இலக்குகளை வரையும் பேராசிரியர்காலித், அப்பின்னணியில் பெண்கள், ஜனநாயகம், சகோதர சமூகத்தவர்கலுடனான உரையாடல் போன்ற இன்னும் பல தலைப்புக்களில் தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோரது நிலைப்பாடுகளை மிக விரிவான உரையாடல்களினூடாக கேள்விக்குட்படுத்துகிறார்.
பெண்கள் உரிமை, மதங்களுக்கிடையான கலந்துரையாடல், ஜனநாயகம் போன்ற கருத்தாக்கங்களில் காலிதின் சிந்தனைகள்
நீதி, சமத்துவம் போன்ற இஸ்லாம் வலியுறுத்தும் அடிப்படை பெறுமானங்களின் அல்லது இலக்குகளின் பின்னணியிலேயே பேராசிரியர் காலித் பெண்கள், மதங்களுக்கிடையான கலந்துரையாடல் போன்ற விவகாரங்களை அணுகுகிறார். இம்முறைமை தூய்மைவாத சிந்தனை போக்குக்கு முற்றிலும் முரனானது. நீதி, சமத்துவம் போன்ற இலக்குகளைஅடையாத சட்ட தீர்ப்புகளை மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்பது காலிதுடையகருத்து. வலிமுறைகள் மாற்றமுரலாம், இலக்குகள் மாற்றமுறாதவை என்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தின் அடியாக பல சட்டப்பிரச்சினைகளை மீளாய்வு செய்கிறார். வரலாற்று மாதிரியில் (Historical model) ஒட்டிக் கொண்டிருப்பது இஸ்லாம் முன்வைத்த இலக்குகளுக்கு முரனான சட்டத்தீர்ப்பை எடுக்க வழிவகுப்பதாக அமையலாம் என்பதால் இலக்குகளை முதன்மைப்படுத்தி அவற்றை அடையும் புதிய வழிமுறைகளை நோக்கி நகரவேண்டும் என்பது அவரது ஆழமான நம்பிக்கை. உதாரணமாக வாரிசுரிமை சட்டத்தில்பெண்களுக்கு பாதி சொத்து கொடுப்பதை மிக விரிவாக உரையாடுகிறார். இறை தூதரது சூழலில் பெண் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடாதவளாகவும் ஆணில் முழுமையாக தங்கியிருப்பவளாகவும் இருந்தாள். அக்கட்டத்தில் இரண்டுக்கு ஒன்று என்ற சட்டம் நீதியைஅடிப்படையாகக் கொண்டிருந்தது. எனினும் நவீன கால ஒழுங்கில் ஆண், பெண் இருசாராரும் தொழில் முயற்சிகளில் ஈடுபடும் போது, பெண் ஆணில் தங்கியிருக்காத பொருளாதார ஒழுங்கில் நீதியை மையமாக வைத்து சொத்துரிமை வகுக்கப்பட வேண்டும்என்ற கருத்தை அவர் வலியுருத்துகிறார். பெண்கள் சாட்சி, மணமுறிவுக்கான பெண்களுக்கான அவகாசம் போன்ற சட்டவிவகாரங்களில் பாரம்பரிய சட்டத்தீர்ப்பை மீள்வாசிக்க வேண்டும்எனவும் அவர் வலியுறுத்திக் கூறுகிறார்.
சவூதி அரேபிய அறிஞர்களது பெண்கள் சார்ந்த சட்டதீர்ப்புகள் பெண்களுக்கு மிகப்பெரும் அநீதியாகவும் அவர்களது உரிமைகளை புறக்கணிப்பதாகவும் அமைந்துள்ளதாக விமர்சிக்கிறார். பெண்கள் வாகனமோட்டுவது, கப்ருகளை தரிசிக்க செல்வது மஹ்ரமில்லாதவரோடு தனித்திருக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும். ஆண்-பெண்கலப்புக்கு காரணமாக அமைந்து விடுவதாகவும் பித்னாக்கு வழிவகுப்பதாகவும் அவர்கள்காரணம் கூறுகின்றனர். ஆண்-பெண் இரு சாராராலும் தோற்றம்பெறும் ஓர் நிலைமைக்கு ஏன்பெண் மாத்திரம் தனது உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது பேராசிரியர்காலிதுடைய கேள்வியாக அமைகிறது. அவர்களது தீர்ப்புக்கள் பெண்ணுக்கு அநீதியாக அமைகின்றன எனவும் வாதாடுகிறார். அவளது அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
முஸ்லிம்களது சகோதரத்துவ சமூகங்களுடனான உறவில் தூய்மைவாத சிந்தனைகொண்டோர் உலகை இஸ்லாமிய நிலம், குப்ர் நிலம் என பிரிக்கும் போக்கை காலித் அபூபழ்ல் பிழை காண்கிறார். இப்பிரிப்பு தூய்மைவாத சிந்தனை முறைமை தோற்றம் பெறுவதற்கும் அவர்களது சிந்தனைக்கான ஆதாரமாக உருவாவதற்கும் காரணமாய் அமைந்தது. முஸ்லிமல்லாதவர்களை எதிரிகளாக கட்டமைத்து, அவர்களை தாக்கும் மனோநிலைக்கு இப்பிரிப்பு முறைமை அவர்களை இட்டுச் சென்றது. இது அல்குரானின் பிரிப்பல்ல. மாற்றமாக ஒரு கட்டத்தில் தோன்றிய வரலாற்றுச் சூழ்நிலையில் (Historical circumstance) தோற்றம்பெற்ற ஓர் பிரிப்பு என அவர் வாதாடுகிறார். அல்குரானது கருத்தில் சமாதானமே அடிப்படை, போர் சுமூகமான சமூக இயக்கத்தை சீர்குழைக்கக்கூடியது எனக் கருதும் காலித் அபூ பழ்ல், போராட்டம் இறைவனது படைப்புக்களது ‘அழகு’ (Beauty) எனும் மிக முக்கிய பண்பை நாசம் செய்யக்கூடியதாகவும் உள்ளது என கருதுகிறார். மனிதர்களுக்கு மத்தியில் உருவாகும்முரண்பாடுகள் ‘வன்முறையற்ற வழிமுறைகள்’ (Non-violent means) கொண்டே தீர்க்கப்படவேண்டும் என்பதே அல்குரானின் வலியுறுத்தப்பட்ட கருத்தாகும். ‘மத பன்மைத்துவம்’ (Religious pluralism) என்பது உலகவிதி, தவிர்க்க முடியாத ஓர் யதார்த்தம் என்பதை அவர்ஆழமாக நம்புகிறார். முஸ்லிம்கள் தமது தூதை அடுத்தவர்களுக்கு எத்திவைக்கும் உரிமைபெறுகிறார்கள். அதனை ஏற்கவும் மறுக்கவும் அடுத்தவர்கள் உரிமை பெறுகின்றனர். எதுவாக இருந்தாலும் பொதுவான பெறுமானங்களில் (Common values) அனைவரும் இணைந்து இயங்க முடியும் என்றும் கூறுகிறார்.
இஸ்லாம் முன்வைக்கும் அரசியல் சிந்தனையைப் பொறுத்த வரையில், அல்குரான் வரையறுத்ததொரு அரசியல் மாதிரியை குறிப்பிட்டுக் கூறவில்லை, மாற்றமாக அரசியல் சார்ந்தபொதுவான சில அடிப்படைக் கூறுகளையும் விதிகளையுமே கூறியிருக்கிறது என்கிறார்காலித். முஸ்லிம்கள் இவ்வடிப்படை கூறுகளையும் விதிகளையும் முன்நிறுத்தி எவ்வகையானஅரசியல் ஒழுங்கையும் மதிப்பீடு செய்யக்கூடிய நிலைக்கு வர வேண்டும் என்கிறார். இப்பின்னணியில் இன்றிருக்கும் ஜனநாயக ஒழுங்கு ஏனைய மாதிரிகளை விட ஒப்பீட்டளவில் இஸ்லாம் கூறிய அடிப்படைகளையும் விதிகளையும் உத்தரவாதப்படுத்துவதாக அமைகின்றதுஎன கூறுகிறார் அவர். சர்வதிகார மற்றும் எதேச்சதிகார முறைமைகள் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரன்படுவதுடன் ஷரீஆவின் இலக்குகளை அடைவதற்கும் அம்முறைகள் தடையாய் அமைந்துவிடுகின்றன எனவும் கருதுகிறார். ஜனநாயக முறைமை பொறுப்புக் கூறல் மற்றும் பலரது கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தல் போன்ற பெறுமானங்களை கொண்டிருப்பதை ஆரோக்கியமானதாக கருதுகிறார்.