ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் வித்தியாசமான உரையாடல்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது. பல கேள்விகள் முஸ்லிம்கள் நோக்கி முன்வைக்கப்படுகின்றன. அல்குர்ஆன் தீவிரவாதத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது என சிலர் கூறுகின்றனர். அது பெண்களுக்குரிய உரிமைகளை கொடுக்காது அவர்களை அடக்குகிறது என இன்னும் சிலர் வாதாடுகின்றனர். இஸ்லாத்தை துறப்பவர்களைக் கொலை செய்ய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துவதாக இன்னொரு குற்றச்சாட்டும் இருக்கிறது. குறிப்பாக இக்குற்றச்சாட்டை அண்மையில் சிலர் மிக பகிரங்கமாக கூறி வருகின்றனர். இவர்கள் கூறுவது போல இஸ்லாத்தை துறந்தவர்கள் கொலை செய்யப்பட வேண்டுமா என்ற கருத்தை இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆன் மற்றும் இறை தூதரது ஹதீஸ்களினூடாகப் புரிந்துகொள்ள இக்கட்டுரை முயல்கிறது.

அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை ஆய்வு செய்யும்போது கட்டுரை பின்வரும் இரு அணுகுமுறைகளைப் பின்பற்றுகிறது.

  1. குறிப்பிட்டதொரு தலைப்பை ஆய்வுக்குட்படுத்தும்போது அத்தலைப்புடன் தொடர்புபடும் அனைத்து அல்குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் ஆரம்பமாக திரட்டிக்கொள்ளல்.
  2. ஒன்று திரட்டிய அல்குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் புரிந்துகொள்ள முற்படும் போது அல்குர்ஆன் இறங்கிய காலப்பகுதி மற்றும் ஹதீஸ்கள் கூறப்பட்ட, நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னணியையும் அரசியல், சமூக சூழலையும் புரிந்துகொள்ளல்.

இவ்விரு முறைமைகளினூடாக இஸ்லாத்தைத் துறத்தல் பற்றி அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் என்ன கூறியிருக்கின்றன, அச்செயற்பாட்டுக்கான தண்டனை யாது என்பதை ஆய்வுக்குட்படுத்த முயல்கிறோம். இஸ்லாத்தைத் துறத்தல் பற்றி வந்திருக்கும் அல்குர்ஆன் வசனங்களை இரு வகைகளாக பிரித்துப் பார்க்கலாம்:

  1. மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் பற்றி பேசும் வசனங்கள்
  2. இஸ்லாத்தைத் துறத்தல் அல்லது இஸ்லாத்தின் அடிப்படைகளை ஏற்று பின் இன்னொரு மதத்தை, நம்பிக்கையை ஏற்றல்.

மத சுதந்திரத்தைப் பேசும் வசனங்களில் சில மிகத்தெளிவாகவும் இன்னும் சில மறைமுகமாகவும் குறிப்பிட்ட விடயத்தை வலியுறுத்துகின்றன. மத சுதந்திரம் இஸ்லாத்தின் “அடிப்படை விதி” என்பதை இரு வசனங்கள் மிகத் தெளிவாக முன் வைக்கின்றன:

“மார்க்கத்தில் நிர்ப்பந்தம் என்பதே இல்லை”
(சூரா பகரா 256),
"உங்கள் இறைவன் நாடியிருந்தால் பூமியிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொண்டவர்களாக மாறியிருப்பர். அனைவரும் நம்பிக்கை கொண்டவர்களாக மாறவேண்டும் என நீங்கள் அவர்களை நிர்ப்பந்திக்கிறீர்களா?"
(சூரா யூனுஸ் 99)

இவ்விரு வசனங்களும் மதசுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பை முன்வைக்கும் வசனங்கள். இவ்விரு வசனங்களும் பொது சட்டமொன்றை உருவாக்குகின்றன. தேர்வுச் சுதந்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் தனக்கு விருப்பமான கொள்கையை, நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளவும் நடைமுறைப்படுத்தவும் முடியும் என்ற உண்மையை மிகத் தெளிவாக இவ்விரு வசனங்களும் முன்வைக்கின்றன.

இஸ்லாத்தைத் துறத்தல் அல்லது இஸ்லாத்தின் அடிப்படைகளை ஏற்று பின் இன்னொரு மதத்தை, நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளல் பற்றிய வசனங்கள் பல வந்திருக்கின்றன. இஸ்லாத்தை துறத்தல் (ரித்தத்) எனும் சொல் ஆறு வசனங்களில் ( பகரா: 109, 217, ஆலு இம்ரான்: 100, 149, மாஇதா: 54, முஹம்மத்: 25) பயன்படுத்தப்பட்டிருப்பதுடன் இஸ்லாத்தைத் துறத்தல் எனும் விடயத்தை குறிக்கும் ரித்தத் எனும் சொல் பயன்படுத்தப்படாது, வேறு விதமாக ஒன்பது வசனங்களில் கலந்துரையாடப்படுகிறது: (ஆலு இம்ரான்: 72-73, 86-90, நிஸா: 88-89, 137, மாஇதா: 5, அன்ஆம்: 88, தவ்பா: 73-74, நஹ்ல்: 106, ஸுமர்: 65). மேற்குறிப்பிட்ட அனைத்து வசனங்களையும் கவனமான வாசிப்புக்குட்படுத்தும் போது இஸ்லாத்தைத் துறப்பதற்கான உலக தண்டனை எதனையும் அவை முன்வைக்கவில்லை. ஒரு வசனம் கூட நேரடியாகவோ மறைமுகமாகவோ உலக தண்டனையை குறிப்பிட்டுக் கூறவில்லை. மாற்றமாக தூதை எத்திவைப்பதில் கவனம் செலுத்தும் படி இறைதூதரை வழிகாட்டுகிறது. இறைதூதரது பணி “எத்திவைத்தல்” மாத்திரமே என அல்குர்ஆன் பல இடங்களில் தெளிவாகக் கூறுகிறது.

இஸ்லாத்தின் முதல் மூலாதாரமான அல்குர்ஆன் இஸ்லாத்தை துறத்தலுக்கு எவ்வித உலக தண்டனையையும் கூறாத நிலையில் அதன் அடுத்த மூலாதாரமான இறைதூதரது ஹதீஸ்கள் நோக்கி நகர வேண்டியுள்ளது.

“இஸ்லாத்தை துறத்தல்” என்ற காரணத்துக்காக கொலை செய்யப்பட வேண்டும் என்று தெளிவாக தூதரது ஏவல் எங்கும் பதிவாகியதாக இல்லை. மாற்றமாக, பிரபல்யமான இரு நிகழ்வுகள் இஸ்லாத்தைத் துறந்தவர்களை இறைதூதர் கொலை செய்யவில்லை என்பதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன:

  1. “ஓர் அரபி இறைதூதரிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக சத்திய பிரமாணம் செய்தார். மதீனாவில் இருக்கும் போது அவரை கடும் காய்ச்சல் பீடித்தது. நபியவர்களிடம் மீண்டும் வந்த அவர் தனது சத்திய பிரமாணத்தை மீளப்பெற அனுமதிக்குமாறு வேண்டினார். நபியவர்கள் மறுக்கிறார்கள். மீண்டுமொரு முறை வந்து தனது சத்திய பிரமாணத்தை மீளப்பெற அனுமதிக்குமாறு வேண்டினார். நபியவர்கள் மீண்டும் மறுக்கிறார்கள். மூன்றாவது முறையாகவும் வந்து தனது சத்திய பிரமாணத்தை மீளப்பெற அனுமதிக்குமாறு வேண்டினார். நபியவர்கள் மீண்டும் மறுக்கிறார்கள். பின் அந்த அரபி அங்கிருந்து வெளியேறிச் சென்றார். நபியவர்கள் கூறினார்கள்: மதீனா நகரம் தனது அசிங்கங்களை வெளியேற்றுகிறது. அதன் நல்ல பகுதிகள் மேலும் பட்டைதீட்டப்படுகின்றன (புஹாரி, முஸ்லிம்). குறிப்பிட்ட அரபி தன்னை இஸ்லாத்தை விட்டும் நீக்கிக் கொள்வதாக தெளிவாக கூறி வெளியேறிய போது நபியவர்கள் அவரது சுதந்திரத்தின் படி செயற்பட விட்டுவிட்டார்கள். கொலை செய்யவோ தண்டிக்கவோ இல்லை.
  2. ஒரு கிறிஸ்தவர் இஸ்லாத்தை ஏற்றார். அல்குர்ஆனின் சூறா பகரா, மற்றும் சூறா ஆல இம்ரான் போன்ற சூறாக்களை அழகாக ஓதினார். நபியவர்களுக்கு எழுதிக் கொடுப்பவராகவும் இருந்தார். சிறிது காலத்தில் மீண்டும் கிறிஸ்தவராக மாறினார். தான் எழுதிக் கொடுத்தவற்றைத் தவிர முஹம்மத் எதனையும் அறிபவராக இல்லை என்றும் கூறித் திரிந்தார். சிறிது காலத்தின் பின் இயல்பு மரணம் அடைந்தார். அவரை அடக்கம் செய்தனர்… (புஹாரி). இந்த ஹதீஸ் இஸ்லாத்தை துறந்து பின் இஸ்லாத்துக்கும் அதன் தூதருக்கும் எதிராக பிரச்சாரம் செய்தவர் கொலை செய்யப்படவில்லை, மாற்றமாக இயற்கை மரணமெய்தினார் என்றே வருகிறது.

இஸ்லாத்தைத் துறந்தவர்களில் சிலர் கொலை தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்ற ஹதீஸ்கள் சிலதும் இருக்கின்றன. அவர்கள் அனைவரும் அன்று சட்டத்திலிருந்த கொலை தண்டனைக்குரிய இன்னொரு குற்றத்தோடு தொடர்புபட்டவர்கள் என்பதை நாம் அது பற்றி வந்திருக்கும் ஹதீஸ்களை பின்னணி நிகழ்வுகளுடன் இணைத்துப் பார்க்கின்ற போது புரிந்துகொள்ள முடியும். இங்கு ஓரிரு உதாரணங்களை தருவது விடயத்தை மேலும் தெளிவுபடுத்தலாம்:

  1. உக்ல் மற்றும் உரைனா கோத்திரத்தை சேர்ந்த சிலர் கொலை செய்யப்படுகின்றனர். காரணம் அவர்கள் ஒட்டக இடையர்கள் பலரை கொலை செய்து ஒட்டகங்களை திருடிச் சென்றிருந்தனர். அதே நேரம் அவர்கள் இஸ்லாத்தையும் துறந்திருந்தனர். நபியவர்களது தண்டனை இஸ்லாத்தை துறத்தலுக்கானதல்ல. மாற்றமாக கொலை செய்தமைக்கானது (புஹாரி).
  2. ஹாஷிம் இப்னு சுபாபா என்பவர் தவறுதலாக மதீனாவாசி ஒருவரால் கொலை செய்யப்படவே அவரது சகோதரரான மிக்யஸ் இப்னு சுபாபா என்பவர் தன் சகோதரருக்காக பழிக்குப் பழி வாங்க மதீனா வந்தார். முஸ்லிம் போன்று நடித்தார். நஷ்ட ஈட்டையும் பெற்றுக் கொண்டார். தன் சகோதரனை கொலை செய்தவரையும் கொலை செய்தார். பின் பொய்யாக வெளிப்படுத்தி வந்த இஸ்லாத்தையும் துறந்தார். இந்நிகழ்வு பற்றி கவிதையும் கூறினார். நபியவர்கள் இவரை கொலை செய்யும்படி ஏவினார்கள் (ரியாழுர் ஸர்களி).
  3. அப்துல்லாஹ் இப்னு கதல் இஸ்லாத்தை ஏற்று மக்காவிலிருந்து மதீனா வந்தார். ஸகாத் வரியை அறவிட அவரையும் குஸாஆ கோத்திரத்தைத் சேர்ந்த ஒருவரையும் இறைத்தூதர் அனுப்பிவைத்தார். ஸகாத் தொகையை அறவிட்டதன் பின் குஸாஆ கோத்திரத்தைச் சேர்ந்தவரை கொலை செய்துவிட்டு திரட்டிய பணத்தையும் எடுத்துக் கொண்டு மக்கா திரும்பினார் (இப்னு ஹிஷாம்).

இவ்வாறுதான் ஏனைய நிகழ்வுகளும். அன்றைய சூழலில் சட்டமாக்கப்பட்டிருந்த கொலை தண்டனைக்கான குற்றமொன்றை செய்யும் போது அதற்குரிய தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு தண்டிக்கப்பட்டவர்களுள் சிலர் இஸ்லாத்தை துறந்தவர்கள். கொலைக்கான காரணம் குறிப்பிட்ட குற்றமே தவிர இஸ்லாத்தை துறத்தலல்ல என்பதையே மேலுள்ள விளக்கம் தெளிவுபடுத்துகிறது.

இன்னுமொரு ஹதீஸ் இருக்கிறது. அதனை மக்கா, மதீனா சூழல் மற்றும் அன்று நிழவிய இரு முகாம்கள் சார்ந்த முரண்பாடுகளது பின்னணியில் புரிந்து கொள்வதே பொறுத்தமானது. நபியவர்களது சூழல் அடிமைத்துவம் மிகைத்திருந்த காலம். பணக்காரர்களும் அதிகார வர்க்கத்தினரும் ஏனையவர்களை அடக்கியாளும் போக்கே அங்கிருந்தது. ஒரு சிறு தொகையினர் எல்லை மீறிய அதிகாரம் பெற ஏனையோர் அவர்களுக்கு அடிமைகளாக இருந்து பணிவிடை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். பெண்கள் பெறுமானமற்றவர்களாக இருந்தனர். அநியாயமும் அநீதியும் தலைவிரித்தாடின. சமூக ஒழுங்கின் எல்லா பகுதிகளும் முறையற்றிருந்தது.

இக்காலப்பகுதியில்தான் இறைதூதருக்கு அல்குர்ஆன் அருளப்படுகிறது. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்தை உடைத்தெறியும்படி ஏவியது. பெண்களது இயல்புக்கேற்ற பொறுப்புக்களை சுமத்தியது. அதிகாரவர்க்கம், அதிகாரமற்ற வர்க்கம் என்ற பிரிவினைகளை இல்லாமல் செய்வதற்கான வழிவகைகளை மேற்கொண்டது. சுருக்கமாக கூறுவதாக இருந்தால் அன்றிருந்த சமூக ஒழுங்கை அல்குர்ஆன் கேள்விக்குட்படுத்தி மீளொழுங்குபடுத்த முனைந்தது எனலாம். இப்புதிய போக்கு இதுகால வரையிலும் தன் ஆதிக்கத்தின் கீழ் மக்காவை வைத்திருந்து தன் நலன்களை அடைந்துகொண்டிருந்த தலைவர்களை கதிகலங்கச் செய்தது. நிழவிய சமூக ஒழுங்கில் மாற்றமேற்படுவது தனது நலன்களை பாதிக்கும் என்ற வகையில் புதிய தூதை எதிர்க்க ஆரம்பிக்கின்றனர். தம்மோடு பலரையும் இணத்துக் கொள்கின்றனர். முஹம்மத் நபியை சார்ந்தவர்களை சித்திரவதை செய்கின்றனர். சிலரை கொன்றும் விடுகின்றனர். இறுதியில் நபியவர்களை கொலை செய்துவிட தீர்மாணிக்கின்றனர். மக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்த நிலை.

நபியவர்களும் தூதை ஏற்றுக் கொண்டவர்களும் மதீனா நகரில் தஞ்சமடைகின்றனர். சொத்துக்களையும் உடமைகளையும் இழந்து புதிய நகரத்தில் குடியமர்ந்து சிறிது காலத்துக்குள்ளால் மக்கா தலைவர்கள் மீண்டும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடாத்த ஆரம்பிக்கின்றனர். மக்கா தலைவர்களைச் சார்ந்த அநியாயக்காரர்கள் ஒரு பக்கமும் நபியவர்களை சார்ந்த அநியாயமிழைக்கப்பட்டவர்கள் அடுத்த பக்கமுமாக இரு அணிகள் தோற்றம் பெறுகின்றன. இக்காலப்பகுதிகளில் ஒரு அணியிலிருந்து தன்னை விலக்கி, அடுத்த அணிக்கு ஆதரவு தெரிவிப்பது முதல் அணியின் இருப்பையே பாதிக்கும் ஒரு விடயம். இச்சமூக அரசியல் சூழல் கருத்திற் கொள்ளப்பட்டே “யார் தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொள்கிறாரோ அவரை கொன்று விடுங்கள்” என்ற ஹதீஸைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓர் அணியிலிருந்து இன்னோர் அணிக்கு மாறுவதென்பது முதல் அணியின் இரகசியங்கள், தந்திரோபாய திட்டங்கள், எதிர்கால வேலைத்திட்டங்கள் என்ற அனைத்தையும் சுமந்து அடுத்த அணிக்கு கடத்துகிறார் என்றே அர்த்தம். நவீன கால பரிபாஷையில் “இராஜ தந்திர துரோகம்” என்று கூறலாம். இன்று இராஜதந்திர துரோகத்துக்கென்று தண்டனை இருக்கிறது. தன்னை எல்லா வகையிலும் அடக்கியாழ முயற்சிக்கும், தன் உடமைகளை பறித்து தன்னை நாட்டை விட்டு விரட்டிய எதிரணிக்கு ஆதரவு தெரிவித்தல் என்பதும் அவ்வாறான ஒன்றுதான். சில போது அதனை விட பாரதூரமானதொன்றாக கூட கருதலாம். போராட்ட காலத்தில் எதிரணிக்கு மாறியவர் பற்றியே இறுதியாக கூறிய ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

இஸ்லாத்தைத் துறத்தலுக்கு அல்குர்ஆனோ ஹதீஸ்களோ குறிப்பிட்டதொரு தண்டனையை விதிக்கவில்லை என்பது மேற்கூறிய விளக்கங்களிலிருந்து தெளிவாகிறது. மத சுதந்திரத்தை ஊர்ஜிதப்படுத்தல் இஸ்லாத்தின் அடிப்படை இலக்குகளில் ஒன்று என்ற கருத்தை முஸ்லிம் அறிஞர்கள் பலர் வலியுருத்துகின்றனர். நாம் ஆரம்பமாக முன்வைத்த அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை ஆய்வு செய்யும்போது பின்பற்ற வேண்டிய இரு அணுகுமுறைகளையும் அல்லது அவற்றுள் ஒன்றை புறக்கணிக்கும் போது பிழையான முடிவுகள் தோற்றம் பெற வாய்ப்பிருக்கிறது என்பதையும் அழுத்திக் கூற வேண்டியுள்ளது.

(maatram.org இல் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை)

Share.
Leave A Reply

Exit mobile version