பெண்களது சாட்சியம் பற்றிய உரையாடல் இஸ்லாமிய புலத்தில் தொடர்ந்தும்உரையாடப்பட்டு வரும் ஒரு தலைப்பு. குறிப்பாக, நவீனத்துவ, பின்நவீனத்துவ‌ யுகத்தில்இஸ்லாமிய மூலப்பனுவல்களையும் அவற்றின் மீதான பாரம்பரிய அறிஞர்களதுவாசிப்புக்களையும் மீள்வாசிக்கும் நிலை தோன்றியிருக்கிறது. “முஸ்லிம் பெண்நிலைவாதிகள்” (Muslim feminists) அவர்களுள் முக்கியமானவர்கள். ‘இஸ்லாம் பால்நிலையை சமதன்மையில்நோக்கும் ஒரு முறைமை’ (Gender-neutral belief system) என்ற வாதத்தை முன்வைக்கும்அவர்கள், வரலாற்றில் ஆண்களது ஆதிக்கம் மேலோங்கியிருந்ததாகவும் அல்குர்ஆன்வியாக்கியானத்தில் கூட அவர்களது கையே மேலோங்கியிருந்ததாகவும் குற்றம்சாட்டுகின்றனர். ஆமினா வதூத், பாதிமா மேர்நிசி, அஸ்மா பர்லாஸ் போன்றோரைஉதாரணமாகக் கூறலாம். பால்சமநிலை சார்ந்த அனைத்து வாதங்களையும் இக்கட்டுரைஉரையாட முனையவில்லை. சட்டம் சார்ந்த விவாதங்கள் ‘சமூக நம்பிக்கையின் பிரதிபளிப்பு’ (Reflection of social beliefs) என்ற மேலோட்டமான விவாதத்தோடு இக்கட்டுரை சுருங்கிக்கொள்ள‌ விரும்பவில்லை. மாற்றமாக, ‘பெண்களது சாட்சியம்’ சார்ந்த பாரம்பரியஅறிஞர்களுடைய உரையாடல்களில் ‘ஆண், பெண் உடைய சமூக வகிபாகம்’ (Gender roles)என்ற கருத்தாக்கம் எந்தளவு தூரம் இடம் பிடித்திருக்கிறது என்பதையே கவனப்படுத்தமுனைகிறது.

இரு பெண்கள் = ஓர் ஆண் எனும் அல்குர்ஆன் வசனத்துக்கான (2:282) விளக்கங்கள்.

ஈமான் கொண்டோரே! குறிப்பிட்டதொரு காலத்துக்கு உங்களுக்குள் கடன் கொடுக்கல்வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்…  உங்களில் ஆண்கள்இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் உங்களுக்கு திருப்தியான ஆண் ஒருவரையும், பெண்கள் இருவரையும்சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டுவதற்கேயாகும்” (பகரா 282).

ஏன் ஓர் ஆண் இரு பெண்களுக்கு சமமாகின்றான் என்ற கேள்விக்கு ஆரம்ப கால அறிஞர்களதுபெரும்பாலான வியாக்கியானங்கள் ‘பெண்களது இயல்புநிலை’ (Women’s nature) என்றவாதத்தை முதன்மைப்படுத்தியதாகவே இருக்கிறது. உதாரணமாக இமாம் ராஸி “பெண்களதுஉயிரியல் இயல்பு” (Biological nature) என்ற வாதத்தை முன்வைக்கிறார். நவீன கால தப்சீர்ஆசிரியரான செய்யது குதுப் “பெண்களது உளவியல்” (Women’s Psycology) என்று கூறுகிறார். ‘இயல்புநிலை’ என்ற‌ வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தி வந்த இவ்வாதத்தை முதன்முதலில்கேள்விக்குட்படுத்தியவர் முஹம்மத் அப்துஹூ ஆவார். கொடுக்கல் வாங்கலில் ஆணும்பெண்ணும் வகித்து வந்த வித்தியாசமான பாத்திரங்களே (Different economic roles)இவ்வேறுபாட்டுக்கான காரணம் என வாதிட்டார். 2:282 அல்குர்ஆனிய வசனத்தில் வரும் 1=2 என்ற சமன்பாடு எல்லா காலத்திலும் பின்பற்றப்பட வேண்டிய உலகலாவிய பெறுமானம் அல்ல, எல்லா நீதிமன்றங்களிலும் நடைமுறையாக வேண்டிய சட்டமும் அல்ல என்று வாதாடினார். சமூக, சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றமடைய முடியுமான சமன்பாடு என்றார். 

சாட்சியம் கூறலின் அரசியல்கள் (The politics of Testimony)

சாட்சியம் கூறுதல் “நம்பகத்தன்மை” என்பதோடு மாத்திரம் சுருங்கிக் கொள்வதில்லை. மாற்றமாக, இன்னும் சில காரணிகளோடும் நேரடியாகத் தொடர்புபடுகிறது. நீதிபதி, வாதிமற்றும் பிரதிவாதி, சாட்சி என்ற முக்கோண தொடர்பு உள்ளது. இதில் நீதிபதியும், சாட்சியாளரும் “அதிகாரம்” (Power) பெற்ற‌வர்கள். “மறைமுகமான நலன்கள்” (Hidden interests) தொழிற்பட வாய்ப்புள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கும் முடியுமாகஉள்ளது. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் அதிகாரமும் நலனும் நேரடியாகவேதொடர்புபடுகின்றன. எனவேதான் இதனை “அரசியல் சார்ந்த கருத்தாடல்” (Political discourse) என்கிறோம். 

இக்கருத்தாடலுக்கு முற்றிலும் மாற்றமானதொரு கருத்தாடல்தான் “நியமம் சார்ந்தகருத்தாடல்” (Normative discourse). இஸ்லாமிய வரலாற்றில் ஹதீஸ் அறிவிப்புக்களைஉதாரணமாகக் கூறலாம். இங்கு பால்நிலை சமமாகக் கருதப்படுகிறது. ஒரு ஆணுடையஅறிவிப்பும் ஒரு பெண்ணுடைய அறிவிப்பும் ச‌மமாகிறது. இவ்விரு வகையான வித்தியாசமானநிலைப்பாடுகளுக்குமான காரணம் ஹதீஸ் ரிவாயத்தின் போது பொய் சொல்தற்கான தூண்டற்காரணிகள் மிகக் குறைவாகவும், சாட்சியின் போது நலன் தொழிற்படுவதால் பொய்சொல்தற்கான தூண்டற் காரணிகள் அதிகமாக தொழிற்பட முடியும் என்ற வாதத்தை இமாம்கராபி முன்வைக்கிறார். அதுபோல, ரிவாயத்தை ஒரு சமூகம் தொடர்ந்தும்ஆய்வுக்குட்படுத்தும், பிழைகள் காலத்துக்குக் காலம் அடையாளப்படுத்தும். ஆனால், சாட்சியம் கூறலும், தீர்ப்பு கூறலும் அவ்வாறானதல்ல. இரண்டு, மூன்று நபர்களுடன்சுருங்கியது. விளைவை உடனே அனுபவிக்க வேண்டியேற்படும். உயிருடன் அல்லதுசொத்துடன் தொடர்பான ஒன்றாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. 

நியமம் சார்ந்த உரையாடல் பால்நிலை வேறுபாடுகளைத் தாண்டியது. அங்கு பெண் ஒருமுப்தியாக இருக்க முடியும். இதனை இமாம் இப்னு ஸலாஹ் தனது “ஆதாபுல் முப்தி வல்முஸ்தப்தி” என்ற நூலில் விரிவாகப் பேசியிருக்கிறார்.  

சாட்சியத்தில் பால்நிலை வேறுபாட்டை நியாயப்படுத்தல்

(அறிவியல் தளத்தில் பெண்களது பங்களிப்பு, 

அரசியல் ரீதியாக விளிம்புநிலையிலிருந்த பெண்ணின் சமூக பாத்திரம்)  

இஸ்லாமிய வரலாற்றில் பெண் அறிவியல் ரீதியாக மிகப் பெரும் பங்களிப்புக்களைசெய்திருக்கிறாள். ஆயிஷா நாயகி ஹதீஸ் மற்றும் பிக்ஹ் துறையில் பேசப்படும் ஓர் ஆளுமை. இமாம் கராபியுடைய சிந்தனையில் புலமைபெற்றிருந்த‌ உம்முல் ஹசன் பாதிமா பிந்த் கலீல்கத்தானி இன்னோர் உதாரணம். இவ்வாறான ஆளுமைகள் பல. இவர்களது ஹதீஸ்அறிவிப்பும், பத்வாக்களும், கற்பித்தலும் இன்னொரு பெண்ணை வேண்டி நிற்கவில்லை. ஒருபெண்ணிடமிருந்து பல ஆண்கள் கற்றார்கள். ஒரு பெண்ணின் பத்வாக்களை ஏற்றுக்கொண்டார்கள். 

அவ்வாறாயின் ஏன் சாட்சியம் கூறலில் மாத்திரம் இரு பெண்கள் என்ற சமன்பாடு? என்றகேள்வி தோற்றம் பெறுகிறது. ஆரம்ப கால இமாம்களது கருத்துக்களை வாசித்துப்பார்க்கின்ற போது பல வித்தியாசமான வியாக்கியான‌ங்கள் தோற்றம் பெற்றிருப்பதைஅவதானிக்கலாம். அவற்றுள் முக்கியமானதுதான், ‘சமூக ரீதியான காரணிகள்’ அல்லது ‘சமூககட்டமைப்பில் பெண் வகித்த வகிபாகம்’ என்ற விளக்கம். 

உதாரணமாக இமாம் கராபியை எடுத்துக் கொள்கிறோம். பொதுவாக சமூகங்கள் ஆணை விடபெண் தரம் குறைந்தவள் என்ற பார்வை கொண்டனவாகவே உள்ளன. இமாம் கராபி, தான்வாழ்ந்த சூழல் அவ்வாறானதாகவே இருந்தது என்கிறார். இவ்வகையான சமூக கட்டமைப்பில்வழக்குகள் விசாரிக்கப்படும் நிறுவனங்கள் “நிறுவன ரீதியானதொரு பிரச்சினை” (Institutional problem) ஒன்றை முகம்கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றன. ஆணாதிக்கம் மிகைத்திருக்கும்சமூக ஒழுங்கில், வழக்கு விசாரணையில் தோல்வியடைந்த மனிதன் தன்னுடைய தோல்விக்குஒரு பெண்தான் காரணம் என்பதை இலகுவில் ஜீரணித்துக் கொள்ள மாட்டான். முடிவைதிருப்தியுடன் ஏற்றுக் கொள்ள மாட்டான். இவ்வகை குழப்ப நிலையை இல்லாது செய்யஇன்னொரு பெண்ணின் உதவி அவசியப்படுகிறது என்ற சமூகவியல் சார்ந்த வாதத்தை இமாம்கராபி முன்வைக்கிறார். கராபியின் அடுத்த வாதம், மூலாதாரம் சார்ந்தது. ஹதீஸில் வரும்பெண்கள் அறிவிலும் மார்க்கத்திலும் குறைந்தவர்கள் என்ற வாதத்தை முன்வைத்து இருசாட்சிகளை நியாயப்படுத்த முனைகிறார். ராஸி, குதுப் போன்றோரும் இவ்வகையாகவேபிரச்சினையை அணுகுகின்றனர்.

சிரியா நாட்டைச் சேர்ந்த ஹனபி அறிஞர் தராப்லுசி இவ்வாத்தை இன்னொருகோணத்திலிருந்து அணுகுகிறார். ஒரு பெண்ணுடைய சாட்சியம் மாத்திரம்  ஆதாரமாகிவிடாது என்பதனூடாக பெண் சமூக விவகாரங்களில் ஈடுபடுவதை குறைக்க‌ முனைகிறது. பெண் வீட்டில் இருப்பதுடன், ஆண், பெண் கலப்பு எனும் தேவையற்ற சமூக உறவை விட்டும்அவளைப் பாதுகாக்கவும் இச்சட்டம் உதவுகிறது என்று சமூகவியல் சார்ந்த வாதாட்டம் ஒன்றைமுன்வைக்கிறார்.

கராபியுடைய முதல் வாதத்தையும், தராப்லுசியுடைய வாதத்தையும் முன்வைத்து, சமூகஒழுங்கில் மாற்றங்கள் நிகழும் போது சட்டமும் மாறுமா? என்ற கேள்வியையும் கேட்கவேண்டியுள்ளது. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், ஆண்,பெண் கலப்புசாதாரனமான இருக்கும் சமூக ஒழுங்கிலும் பெண்ணுடைய சாட்சியம் ஒரு ஆண் = இருபெண்கள் என்ற சமன்பாட்டில்தான் இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.

பொது & பிரத்தியேக‌ தளங்கள், நியமம்சார் & அரசியல்சார் கருத்தாடல்கள் மற்றும்பால்நிலை.

சாட்சியத்தோடு தொடர்பான இஸ்லாமிய சட்டங்களை அறிஞர்கள் இரண்டாகப்பிரிக்கின்றனர். பொருளாதாரத்துடன் அல்லது கொடுக்கல்-வாங்கலுடன் தொடர்பான பகுதிமுதல் வகை. மனித உடலோடு தொடர்புபடும் கொலை, கொள்ளை, திருமணம், தலாக் போன்றபகுதிகள் அடுத்த வகை. இரண்டாம் பகுதியில் பெண்களது சாட்சிகளுக்கு இடமில்லைஎன்பது மிகப் பொதுவானதொரு கருத்து. பெண்களது உடலோடு தொடர்புபடும்விவகாரங்களில் அவளது சாட்சி ஏற்றுக் கொள்ளப்படும். 

இவ்வகை பிரிப்பு பொதுத்தளம் (Public space) & பிரத்தியேகத் தளம் (Private space) என்றபிரிப்பிலிருந்து ஆரம்பிக்கிறது. பொதுத்தளம் ஆணின் தளமாகவும் பிரத்தியேகத் தளம்பெண்ணின் தளமாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. என்வேதான், பிள்ளையை பிரசவிக்கும்போது பிள்ளை இறந்துவிட்டால் தாயின் வயிற்றில் இறந்ததா? பிரசவித்ததன் பின் இறந்ததா? என்பதனை பெண்ணின் சாட்சியத்தோடு சுருக்கிக் கொள்ள முடியும் என்ற முடிவுக்குவருகின்றனர். பிரத்தியேக தளங்களில் ஆணுடைய சாட்சி நீக்கப்படுகிறது. 

கொடுக்கல் – வாங்கலில் பெண் முழுமையாக ஒதுங்கியவள் அல்ல. ஓரளவு ஈடுபடக் கூடியவள். கொலை, கொள்ளை போன்றன பொதுத் தளம் சார்ந்த செயற்பாடுகள் என்பதால் அவளதுசாட்சியம் அங்கில்லை. திருமணம், தலாக் போன்றன பிரத்தியேக தளம் கொண்டிருப்பினும்அவற்றில் ‘பொது அங்கீகாரம்’ (Public recognition) தேவைப்படுகிறது. எமது சூழலில் “பொதுத்தளம்” என்பது என்ன? என்ற கேள்வியும் இங்கு கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு பகுதி.

பெண்களது சாட்சியத்தை பலவீனப்படுத்தும் இரு காரணிகள் அரசியல் சார்ந்த உரையாடல்மற்றும் பொதுத்தளம் ஆகிய இரு கருத்தாக்கத்தையும் விளக்கினோம். ஹதீஸ் ‘ரிவாயத்’ போன்ற நியமம் சார்ந்த உரையாடல்களில் பெண்ணுடைய அறிவிப்பை ஆணுடையஅறிவிப்புக்கு சமமாக்கியது இஸ்லாம். அரசியல் சார்ந்த உரையாடல்கள் நோக்கி நகர்வதற்குஅவளைத் தூண்டும் ஓர் யுக்தியாக கூட இது இருக்க முடியும். சமூகத்தோடு கலந்து வாழும்பெண்களை “பர்ஸா” எனும் தனிப் பெயர்கொண்டு அழைப்பதுடன் அவர்களது சாட்சியத்தைஹனபி மத்ஹப் இமாம்கள் ஆண்களது சாட்சியத்துக்கு சமமானதாகக் கொள்கின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. 

இன்னொரு விடயத்தையும் இங்கு இணைத்துக் கூறுவது பொறுத்தம். “துறைசார் நிபுணர்கள்”(Experts) உடைய சாட்சியத்துக்கு இஸ்லாமிய அறிஞர்கள் தனித்துவமான இடம்வழங்குகின்றனர். நீதிமன்றம் சில வைத்தியர்களை நியமிக்கும். அவ்வைத்தியர்களது சாட்சியம்- ஆணோ பெண்ணோ – அவ்வாறே ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பெண் வைத்தியர்அறிக்கையை வழங்கினாலும் அது ஊர்ஜிதப்படுத்தலுக்காக இன்னொருவரிடம்செல்வதில்லை.

அரசியல்/ நியமம் எனும் பிரிப்பை தாண்டி சிந்தித்தல்.

வழக்கு விசாரணையின் இலக்கு “உண்மையைப் பெறல்” (Gain truth) என்பதாகும் எனஇமாம்களான இப்னு தைமியா, இப்னுல் கையிம் ஆகியோர் கருதுகின்றனர்.  எனவே, ஹதீஸ்ரிவாயத்தில் முதன்மையாக‌ அறிவிப்பாளரின் உண்மைத்தன்மை பரிசீலிக்கப்படுவது போலசாட்சியத்திலும் முதன்மையாக‌ உண்மைத்தன்மையே பார்க்கப்பட வேண்டும். மாற்றமாக, பால்நிலையல்ல. அதுபோல, 2:282 வசனம் நீதிபதிகளை விழித்துப் பேசும் வசனமல்ல. அதுசாட்சியாளர்களைப் பார்த்துப் பேசுகிறது. உண்மையை வெளிக் கொண்டு வருவதற்குபோதுமான சாட்சியாளர்கள் இருக்க வேண்டும் என்பதே வசனத்தின் நோக்கம். இரு பெண்கள்= ஓர் ஆண் என்ற சமன்பாட்டை அல்குர்ஆன் ஏன் கூறுகிறது என்பதற்கு இமாம் இப்னுல்கையிம் சமூகவியல் காரணியாக பெண் விசாரணை அமர்வுகளுக்கு தொடர்ந்தும் சமூகம்தருவது கஷ்டமானது என்கிறார். பெண் பொதுவாக ஆணை விட‌ அறிவில் குறைந்தவள்என்பதைக் கூறும் இப்னுல் கையிம் அறிவில், ஞாபக சக்தியில் கூடிய பெண் இருப்பின்அவளது சாட்சியம் ஆணுடைய சாட்சியத்துக்கு சமமாகிறது என்கிறார். உம்மு தர்தா, உம்முஅதிய்யா போன்ற பெண்களை உதாரணம் கூறிக் காட்டுகிறார். 

முடிவுரை

நவீனத்துவவாதிகளது வியாக்கியானங்கள் (Modernist interpretations) இஸ்லாமிய சட்டபாரம்பரியத்திலிருந்து உடைந்து பயணிக்கும் புதியதொரு கண்டுபிடிப்பு என வாதிடுவதுபிழையானது. “சமூகவியல் வியாக்கியான முறைமை” (Sociological interpretation) அன்றிலிருந்து இன்று வரை பின்பற்றப்பட்டு வரும் ஓர் முறைமையாகும். நவீனத்துவவாதிகள்எமது பாரம்பரியத்திலிருந்து எடுக்க முடியுமான எத்தனையோ பகுதிகள் இருக்கின்றனஎன்பதையே இக்கட்டுரை நிறுவுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version