(மொரோக்கோ தத்துவ அறிஞரான பேராசிரியர் தாஹா அப்துர் ரஹ்மான் உடைய மேற்கத்தைய நவீனத்துவம் மீதான விமர்சனத்தின் மிக முக்கிய புள்ளிகளுள் ஒன்றாக உலகமயமாக்கல் மீதான விமர்சனம் பார்க்கப்படுகிறது. உலகமயமாக்கல் பற்றிய அவரது விமர்சனங்களை இக்கட்டுரை மிக சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது)

“உலகமயமாக்கல்” என்பதனை வரையறுப்பதில் ஒருமுகப்பட்ட கருத்து அறிஞர்கள் மத்தியில் இல்லை. அவர்களுக்கு மத்தியில் வித்தியாசங்கள் இருக்கின்றன. மொரோக்கோ தத்துவ அறிஞர் தாஹா அப்துர் ரஹ்மான் அச்சொல்லை பின்வருமாறு வரையறுக்கிறார்: “உலகமயமாக்கல் என்பது உலகை தொடர்ந்து அறிவுமயமாக்கும் ஒரு வேலைத்திட்டம். அதனூடாக, தனிமனிதர்கள், சமூகங்களுக்கிடையிலான தொடர்புகளை ஒன்றாக்க விரும்புகிறது. பின்வரும் மூன்று ஆதிக்கங்கள் நிறைவேறுவதனூடாக அத்திட்டம் சாத்தியமாகிறது: அபிவிருத்தி எனும் பெயரில் உருவாக்கப்படும் பொருளாதார ஆதிக்கம், அறிவு எனும் பெயரில் உருவாக்கப்படும் தொழிநுட்ப ஆதிக்கம், தொடர்புசாதனம் எனும் பெயரில் உருவாக்கப்படும் இணைய ஆதிக்கம்”.

இவ்வரைவிலக்கணம் மூன்று அடிப்படை பகுதிகளை தொட்டுக் காட்டுகிறது:

  • அறிவுமயமாக்கும் வேலைத்திட்டம் தொடரியக்கம் கொண்டது, முடிவற்றது.
  • சமூகங்கள், தனி மனிதர்களுக்கிடையிலான தொடர்புகளை ஒன்றுபடுத்த, நெருக்கமாக்க முனைதல். உலகை நகர அளவாக்கல், உலகை கிராம அளவாக்கல், உலகை வீடளவாக்கல் போன்றன உலகமயமாக்கலில் அதிகம் உச்சரிக்கப்படும் சொற்கள்.
  • பொருளாதாரம், தொழிநுட்பம், இணையம் ஆகிய முப்பரிமாண ஆதிக்கம் நோக்கி நகர்தல்.

அபிவிருத்தித் துறையில் உருவாக்கப்படும் பொருளாதார ஆதிக்கமும் "தஸ்கியா" எனும் தூய வளர்ச்சி புறக்கணிக்கப்படலும்

நவீனத்துவத்தின் வரலாற்றுக் கட்டத்தில் முதலாளித்துவம் தோன்றுகிறது. பொருளாதார பலம் அல்லது பொருளாதார ஆதிக்கம் அதன் மையப் புள்ளியாக நிலை நிறுத்தப்படுகிறது. அதனூடாக சமூகத்தில் இருக்கும் பணக்காரன், ஏழை என்ற ஏற்றத்தாழ்வு நீக்கப்பட முடியும், நலன்கள் பகிர்ந்தளிக்கப்பட முடியும் போன்ற கருத்தாக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. பொருளாதாரத்தை இலக்காகக் கொண்ட இச்சிந்தனை, இறுதியில் பெரிய நிறுவனங்களது ஆதிக்கத்தின் கீழ் மண்டியிடக் கூடியதாக மாறிவிட்டது. பல்தேசியக் கம்பனிகளும் முதலை வியாபாரிகளும் பொருளாதாரத்தை அதிகரித்துக் கொள்வதை இலக்காகக் கொண்டு தான் விரும்பியதை சந்தைப்படுத்தினர். விரும்பிய வகையில் சந்தைப்படுத்தினர். சந்தையின் கட்டுப்பாட்டையும் அதிகாரத்தையும் தம் வசம் ஈட்டிக் கொண்டனர். அவர்கள் கூறுவதுதான் சட்டம், அவர்கள் சந்தைப்படுத்துவதுதான் கொள்வனவுக்கான பொருட்கள், அவர்கள் உற்பத்தி செய்வதுதான் அத்தியவசியமானவை என்று சந்தை ஒழுங்கு தலை கீழாகப் புரட்டப்படுகிறது.

வெறும் பொருளாதார நலனே இறுதி இலக்காகிப் போகிறது. சந்தை எவ்வித ஒழுங்குகளுமற்றதாக , போட்டி எவ்வித நிபந்தனைகளுமற்றதாக, இலாபம் எவ்வித வரையறைகளுமற்றதாக மாற்றமுறுகிறது. அதன் இயல்பான விளைவு, சந்தை இலஞ்சத்தால் நிரம்பி வழிகிறது, பரஸ்பர உதவி, ஒத்தாசை இல்லாதொழிகிறது, களவு, கொள்ளை குற்றங்கள் மலிந்து கிடக்கிறது, போதைப்பொருட்கள் கிராக்கி பெறுகின்றன. பொருளாதாரத்தை கடவுளாகக் கொள்ளல், பொருளாதார சீர்கேடு என்பன ஆதிக்கம் பெற்ற வெளிப்பாடுகளாக மாறிவிட்டன.

உலகமயமாக்கல் வேலைத்திட்டம்  காரணமாக “தஸ்கியா” (இது ஓர் அரபுச் சொல். மொழி ரீதியாக அச்சொல் தூய்மைப்படுத்தல், வளர்த்தல் ஆகிய இரு கருத்துக்களையும் கொடுக்கிறது) எனும் “தூய வளர்ச்சி” புறக்கணிக்கப்பட்டு, முடக்கப்படுகிறது. தஸ்கியா அல்லது தூய வளர்ச்சி என்பது நலன் ஈட்டப்படல், அதன் ஊடாக மனித நிலைமை – சடரீதியாக, மானசீக ரீதியாக – சீராகுதல் எனலாம். “மசாலிஹ்” எனப்படும் “மனித நலன்கள்” இங்கு முதன்மை இடம் வகிக்கிறது. மனித நலன் என்பது மனித நிலைமை சீராகுவதைக் குறிக்கிறது. அது சடரீதியான வசதிகளைக் குறிப்பது போல மானசீக ரீதியான ஸ்தீர நிலையையும் குறிக்கிறது. அது சாத்தியமாக வளங்களை அபிவிருத்தி செய்வதும் விழுமியங்களை வளர்த்தெடுப்பதும் அவசியமாகிறது.

அறிவியல் துறையில் உருவாக்கப்படும் தொழிநுட்ப ஆதிக்கமும் "தொழிற்பாடு" எனும் அடிப்படை புறக்கணிக்கப்படலும்

“தொழிநுட்பம்” எனும் கருத்தாக்கம் அறிவுருவாக்கம், அறிவு எனும் கருத்தாக்கங்களை விட்டும் வித்தியாசப்படுகிறது. தொழிநுட்பம் அறிவின் விளைவாகத் தோன்றியது. அறிவை விட ஆயுள் குறைந்தது. தொழிநுட்பம் அறிவை பின்தொடர வேண்டும், அறிவின் இலக்குகளை அடைவதில் துணைநிற்க வேண்டும், பணிவிடை செய்தல் வேண்டும். ஆனால், இன்று அது தலைகீழாய்ப் போயுள்ளது.

தொழிநுட்பம் அறிவின் கடிவாளத்தை வைத்திருக்கிறது. தான் விரும்பிய திசையில் அறிவை பயணிக்கச் செய்கிறது. குறிப்பாக, சர்வதேச சந்தை தொழிநுட்பத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. நுகர்வுத் தேவைகள் தொழிநுட்பத்தினூடாக உருவாக்கப்படுகின்றன. பெரும் நிறுவனங்கள் தன் இலாபத்தை இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தும் வியாபார வேலைத்திட்டங்கள் தொழிநுட்பத்தினூடாக மக்கள்மயப்படுத்தப்படுகின்றன.

தொழிநுட்பத்துக்கும் சமூக வளர்ச்சிக்கும் இடையில் இறுகிய முடிச்சொன்று போடப்படுகிறது. தொழிநுட்ப வளர்ச்சி சமூக வளர்ச்சியின் அளவு கோலாகக் கூட கருதப்படுகிறது. இவ்வகையான பார்வை மெதுமெதுவாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இறுதியில், பொருளாதார நலன், பெரு வியாபாரம், தொழிநுட்பம் என்ற முக்கோண தொடர்பு ஒன்றை ஒன்று பலப்படுத்தும் விதத்தில் உருவாக்கப்படுகிறது. இன்றைய கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் மயக்கமான, பயங்கரமானதொரு எதிர்காலத்தை எதிர்வு கூறுகின்றன. ஒட்டுமொத்த மனித சமூகத்தினதும் எதிர்காலம் கேள்விக்குறியானதாகவே உள்ளது.

தொழிநுட்பம் காரணமாக தனி மனிதர்களுக்கிடையிலான, சமூகங்களுக்கிடையிலான தொடர்பு “இயந்திரமயம்” ஆகி விட்டது. இயந்திரம் எதனை நாம் அதற்கு உட்புகுத்தினோமோ அதனையே நிறைவேற்றும். இங்கு தொழிற்பாடு காணாமல் போய்விடுகிறது. தொழிற்பாடு ஒரு செயலின் பின்னால் இயங்கும் இலக்குடன் தொடர்புபடுகிறது. தொழிற்பாட்டில் இலக்கை மையமாக வைத்தே இயக்கம் நடைபெறுகிறது, காரியங்கள் நிறைவேற்றிக் கொடுக்கப்படுகிறது. இலக்குமைய தொழிற்பாடு விழுமியம் சார்ந்தது, நலன் சார்ந்தது. இதற்கு முற்றிலும் மாற்றமானதுதான் இயந்திரமயமான இயக்கம்.

தொடர்பாடல் துறையில் உருவாக்கப்படும் இணைய ஆதிக்கமும் "பிணைப்பு" எனும் அடிப்படை புறக்கணிக்கப்படலும்

சமூக விவகாரங்களை ஒழுங்குபடுத்த மனிதன் தொடர்பாடலில் ஈடுபட வேண்டியிருந்தது. தொடர்பாடல் சாதனங்கள் ஒவ்வொன்றாக அவனால் கண்டுபிடிக்கப்பட்டன. இன்று நாம் ஓர் இடத்தை அடைந்திருக்கிறோம். இது இணைய யுகம் (Internet) எனக் கொண்டாடப்படுகிறது. உலகமயமாக்கல் சாதிக்க நினைத்த உலகை கிராம அளவாக்கல் இணைய வசதிகளினூடாக  சாத்தியப்பட முடியும் என சிலர் வாதாடுகின்றனர். இவர்களது வாதத்தின் அடிப்படையில் இணையத்தினூடாக தனிமனிதர்களும் சமூகங்களும் நெருக்கமாகின்றனரா? ஒருவரை ஒருவர் ஊடறுத்துக் கொள்கின்றனரா? என்பதை பலமுறை கேட்டுப்பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இணையத்தினூடாக செய்தியைக் கூறுபவர், பெறுபவர் என இரு சாரார் தொடர்புப்டுகின்றனர். ஒளிக்கற்றைகள் ஊடாக செய்திகளும் தகவல்களும் கடத்தப்படுகின்றன. மனிதன் செய்தியைக் கடத்தும் உபகரணத்தோடு தொடர்புபடும் அளவுக்கு அடுத்த மனிதனோடு தொடர்புபடுவதாக இல்லை. செய்திகள் “சமிக்ஞைகள்” ஆக பறக்கின்றன. அத்தோடு, தகவல்கள் மிகப் பெரும்பாலும் “விளம்பரங்கள்” ஆகவே வலம் வருகின்றன. ஒளிவடிவான சமிக்ஞைகள் உயிரற்றவை. தொலைத்தொடர்பு விளம்பரங்கள் வியாபார நோக்கம் கொண்டவை.

உலகமயமாக்கலின் பண்பாட்டுச் சிக்கலைத் தவிர்த்தல்

உலகமயமாக்கல் ஏற்படுத்தியிருக்கும் மேற்கூறிய முக்கோண வடிவ சிக்கலை தவிர்க்க “உலகம்” பற்றிய புரிதலை சரி செய்ய வேண்டியிருக்கிறது. உலகம் என்பது தனிமனிதர்களையும் சமூகங்களையும் இணைக்கும் இடம். ஆனால், விழுமியங்கள் என்ற வரையறையோடு. “உலகம் விழுமிய அடிப்படையில் பிணைப்பை ஏற்படுத்தும் ஓர் இடம்” என்றே நாம் கருதுகிறோம். எனவே, இங்கு வாழும் மனிதனது செயல்கள் “விழுமியம்சார் செயல்கள்” ஆக இருக்க வேண்டும். ஒருவன் அடுத்தவனை மனிதன் எனும் பெறுமானம் கொடுத்தே, அதாவது விழுமியம்சார் படைப்பு என்ற கருத்தின் அடிப்படையிலேயே, அணுக வேண்டும். மனித சமூகத்துக்கிடையிலான உறவாடல் விழுமியம்சார் உறவாடல் ஆக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் இதற்குப் பொறுப்பாகிறான். இதில் குழறுபடிகளை ஏற்படுத்துபவன் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கிறான் என்பதே அர்த்தம்.

பொருளாதாரமும் “தஸ்கியா” எனும் தூய வளர்ச்சியும்

பொருளாதார காரணி அபிவிருத்திக்கான ஏனைய காரணிகளுடன் சேர்ந்து ஒன்றையொன்று பூரணமாக்கிக் கொள்வதுடன், பொருளாதாரம் ஆன்மீகப் பரப்புடன் தொடர்ந்தும் தொடர்பிலிருக்கும் போதே சீரான அபிவிருத்தி ஏற்படுகிறது.

இது மிக முக்கியமாக இரு விடயப் பரப்புக்களை முன்வைக்கிறது:

  1. பொருளாதார காரணி அபிவிருத்திக்கான ஏனைய காரணிகளுடன் சேர்ந்து ஒன்றையொன்று பூரணமாக்கிக் கொள்ளுதல்:

    ஏனைய காரணிகள் என்பதை “இறை கொடை” என்ற கருத்தாக்கத்துடன் தொடர்புப்டுத்தலாம். இறை கொடையைக் குறிக்க அல்குர்ஆன் “பழ்ல்” என்ற சொற்பிரயோகத்தைப் பயன்படுத்துகிறது. “மிகவும் சிறந்தது” என்ற கருத்தைக் குறிக்கும் “பழீலா” என்ற சொல் பெறும் மூலச் சொல்லிலிருந்தே “பழ்ல்” என்ற சொல் பிறக்கிறது. இன்னொரு வகையில், “பழ்ல்” என்பது “ஹைர்” எனப்படும் “நல்லது” என்ற கருத்தையும் கொடுக்கிறது. ஹைர் என்றால் சடரீதியாக, கருத்தியல் ரீதியாக மற்றும் மானசீக ரீதியாக ஏற்படும் நல்ல விடயங்களைக் குறிக்கிறது.

    “இறை கொடையைத் தேடிப்பெற்றுக் கொள்ளல்” (இப்திகாஉ பழ்லில்லாஹ்) என்ற ஏவல் அல்குர்ஆனில் வருகிறது. மிகவும் சிறந்ததையும், நல்லதையும், மனிதனை சடரீதியாக, கருத்தியல் மற்றும் மானசீக ரீதியாக சீர்படுத்தும் வகையில் அது அமைய வேண்டும் என்பதே இறைகொடையைத் தேடிப் பெற்றுக் கொள்ளல் என்பதனூடாக நாடப்படுகிறது. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், இறைகொடையைத் தேடிப் பெற்றுக் கொள்ளல் விழுமியம்சார் செயற்பாடொன்றாகும்.

    இங்கு, வியாபாரப் பொருள் பணப் பெறுமதியுடன் மாத்திரம் சுருங்கிக் கொள்வதில்லை. அது விழுமியங்களுடன் இறுகப் பிணைந்திருக்கிறது. நிலைமாறும் வியாபார சந்தை சட்டங்கள் நிலைமாறா விழுமிய பெறுமானங்களோடு இறுகப் பிணைக்கப்படுகின்றன. நிலைமாறா விழுமிய பெறுமானங்களே சந்தையைக் கட்டுப்படுத்தும் ஆதிக்க சக்தியாக திகழ்கின்றன. இதனூடாக, பணம் தூய்மையாக வளர்ச்சி காண்கிறது, சந்தை சூழலும் தூய்மையாக வளர்கிறது. இவ்விரட்டைப் பரிமாண வளர்ச்சியே உண்மையான பொருளாதார அபிவிருத்தி எனக் கொள்ளலாம்.
  2. ஆன்மீகப் பரப்புடன் தொடர்ந்தும் தொடர்பிலிருத்தல்
    உலகிலே பரவிப் போயிருக்கும் கொடைகளை அல்குர்ஆன் எப்போதும் இறைவனுடன் தொடர்புபடுத்திப் பேசுகிறது. சூரா பகரா 198, சூரா முஸ்ஸம்மில் 20, சூரா நஹ்ல் 14 மற்றும் இன்னும் பல வசனங்கள் இறைபெயருடன் தொடர்புபடுத்தியே “பழ்ல்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. உலகில் இருக்கும் அருள்களின் உண்மையான சொந்தக்காரன் இறைவன் மட்டுமே என்ற கருத்தை இவ்வசனங்கள் ஆழமாக வலியுறுத்துகின்றன. அத்துமீறல், அநியாயங்களில் ஈடுபட மனிதனுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்ற விழுமியம்சார் கருத்தொன்றை அவை சுட்டிக் காட்டுகின்றன.

    பணமும் வியாபாரப் பொருட்களும் கற்புலனாகுபவை. எப்போதும் மனிதனை ஈர்த்து, அவற்றோடு கட்டிப் போடக்கூடியவை. இதிலிருந்து மனிதனை விடுவிக்கும் சக்தி இறைவனோடு மனிதனைத் தொடர்புப்டுத்தும் ஆன்மீகப் பெறுமானத்துக்கே உண்டு. சந்தைக்கும், பணத்துக்கும், வியாபார நடவடிக்கைக்கும் மனிதன் ஆன்மீகப் பெறுமானம் வழங்கும்போது வியாபார நடவடிக்கை வெறுமனே பொருள் மாற்றிக்கொள்ளல் என்ற நிலையிலிருந்து நல்லவைகளைப் பகிர்ந்துகொள்ளல் எனும் உயர்நிலை நோக்கி முன்னேரிச் செல்வதைச் சுட்டி நிற்கிறது.

தொழிநுட்பமும் "இலக்குகளை கருத்திற் கொள்ளல்" எனும் அடிப்படையும்

உபகரணங்களினூடாக நிறைவேற்றிக் கொள்ளல் எனும் கட்டத்திலிருந்து குறிப்பிட்ட செயலது இலக்குகளை கருத்திற் கொண்டு தொழிற்படுத்தல் எனும் கட்டம் நோக்கி நகர்வதை இது குறிக்கிறது. பயனுள்ள அறிவு என்பது இலக்குகளும் விளைவுகளும் கருத்திற் கொள்வதனூடாகவே சாத்தியமாகும்.  

இது மிக முக்கியமாக இரு விடயப் பரப்புக்களை முன்வைக்கிறது:

  1. ஒரு செயலின் பின்னால் நாடப்படும் இலக்குகளைக் கருத்திற்கொள்ளல்:
    குறிப்பிட்டதொரு செயலது வெறும் காரண, காரியத்துடன் மாத்திரம் சுருங்கிக் கொள்ளாது அச்செயலினூடாக எதிர்பார்க்கப்படும் அடைவுகள், இலக்குகள் கருத்திற் கொள்ளப்படுவதே அறிவின் உண்மையான எதிர்பார்ப்பாகும்.
  2. ஒரு செயல் தோற்றுவிக்கும் விளைவுகள் கருத்திற்கொள்ளப்படல்:
    செயல்களது விளைவுகள் இருவகைப்படும். கிட்டிய எதிர்காலத்தில் தோற்றம்பெரும் விளைவுகள், நீண்ட காலத்தின் பின்னர் தோற்றம் பெறும் விளைவுகள். உபகரணங்கள் ஒருபோதும் விளைவுகளை சிந்திக்கப் போவதில்லை. அறிவியல் யுகத்தில் மனிதனுக்கு நலனைப் பெற்றுத்தரும் விடயங்களே முதன்மை வகிக்க வேண்டும்.

இணையமும் "நல்லதைப் பரிமாறிக் கொள்ளல்" எனும் அடிப்படையும்

சரியான தொடர்பாடல் மனிதர்களுக்கு மத்தியிலான நல்ல பேச்சுக்கள் மூலமே சாத்தியமாகும்.

இது மிக முக்கியமாக இரு விடயப் பரப்புக்களை முன்வைக்கிறது:

  1. நல்ல விடயங்கள் இல்லாவிட்டால் “நல்லதைப் பரிமாறிக் கொள்ளல்” (தாஹா அப்துர் ரஹ்மான் இதற்கு “தஆருப்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். “நன்மை” என்பதைக் குறிக்கும் “மஃரூப்” என்ற சொல்லின் மூலச் சொல்லிலிருந்தே தஆருப் என்ற சொல்லும் பிறக்கிறது)   சாத்தியமற்றது.  நல்லவைகளைப் பரிமாறல் என்பது தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளல் அல்ல. அதனை விட விசாலமானது. குறிப்பாக, நல்ல விழுமியங்கள் இங்கு தொடர்புபடுகின்றன. பெறுபவர் நல்லதைப் பெற்று, தன் நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொள்கிறார். இங்கு நலன்களைப் பரிமாறிக் கொள்ளலே நடைபெறுகின்றன. வெறும் தகவல் பரிமாற்றம் மிகப் பெரும்பாலும் உயிரற்ற மின்னலைக் கீற்றுக்கலாகவும், வியாபார விளம்பரங்களாகவுமே நகர்கின்றன. நல்லது என்பதற்குப் பதிலாக இலாப நோக்கம் முதன்மையாகி விடுகிறது.  
  2. பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளாமல் நல்லதைப் பரிமாறிக் கொள்ள முடியாது:
    நல்லதொரு விடயத்தை எடுப்பவரும் கொடுப்பவரும் “நல்லது” என்ற அடிப்படை விழுமியத்தில் இணைகின்றனர். விழுமிய அடிப்படையிலானதொரு பிணைப்பு உருவாக்கப்படுகிறது. நல்லது என்பதன் காரணமாக பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதித்தல், திறந்த மனதோடு அணுகுதல், சகிப்புத்தன்மை, பரஸ்பர உதவி, நெருக்கம், அன்பு, நல்ல விடயத்துக்கான போட்டி போன்ற பண்புகள் மிகைக்கின்றன. எடுப்பவர் கொடுப்பவருடைய சூழல், கலாச்சாரம் போன்ற தனித்துவ தன்மைகளையும் அங்கீகரித்த நிலையிலேயே எடுத்துக் கொள்கிறார். இங்கு ஆரோக்கியமானதொரு பரிமாற்றமே நடைபெறுகிறது.
Share.
Leave A Reply

Exit mobile version