வரலாற்றில் முஸ்லிம் அறிஞர்கள் உருவாக்கிய தசவ்வுப், பிக்ஹ், உஸூலுல் பிக்ஹ், உலூமுல் குர்ஆன், ஹதீஸ் போன்ற கலைகளில் சூழல் பற்றிய கருத்தாக்கம் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அவை இஸ்லாமிய பாரம்பரியத்தில் சூழல் பாதுகாப்பு எந்தளவு தூரம் முக்கிய இடம் வகித்திருக்கிறது, எமது மூதாதையர்கள் அவ்விடயத்தில் எவ்வளவு கரிசணையுடன் நடந்துகொண்டுள்ளனர் என்பதை விளக்கப் போதுமானது.
• சூழலும் தஸவ்வுபும்
தஸவ்வுப் சிந்தனையை ‘படைப்பாளனுடன் உண்மையாக நடத்தலும் படைப்பினங்களுடன் பண்பாக நடத்தலும்’ என சிலர் வரைவிலக்கணப் படுத்துகின்றனர். இப்னுல் கையிம் கூறுகிறார்: ‘மார்க்கம் என்பது பண்பாடாக நடப்பது. யார் பண்பாடாக நடக்கிறாரோ அவர் மார்க்கத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்’. படைப்பினங்களுடன் பண்பாக நடத்தல்என்பதில் மனிதன் தன்னை சூழ இருக்கும் தாவரங்களுடனும், விலங்குகளுடனும் வளிமண்டலம், நீர் போன்றவற்றுடனும் நல்ல முறையில் நடத்தல் முதன்மைப்பெறுகிறது. இஹ்சான் என்ற சொல்லையும் (ஹதீஸ் ஜிப்ரீல் இல் வரும் சொல்) தஸவ்வுப் துறை அறிஞர்கள்அதிகம் பயன்படுத்துகின்றனர். நல்லது செய்தல் என்பது சூழலையும் உள்ளடக்குகிறது என்பதுமிகத் தெளிவானது. அன்பு எனும் பண்பாடு மனிதனையும் சூழலையும் இணைக்கிறது எனஅவர்கள் கூறுவர். வானங்களும் பூமியும், அவற்றிலுள்ளவைகளும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மலைகள், மரங்கள், கால்நடைகள், அதிக மனிதர்கள் அல்லாஹ்வை தூய்மைப்படுத்தி, சுஜூத் செய்துகொண்டிருக்கின்றன என அல்குரான் கூறுவதனூடாக மனிதன் பிரபஞ்ச உறவு அல்லாஹ்வின் அடிமை எனும் அடையாளத்தினூடாக வலியுறுத்தப்படுகிறது. (பார்க்க சூரா ஹஜ் 18, இஸ்ராஃ 44). நபியவர்கள் தபூக் போரிலிருந்துமதீனா நோக்கி மீண்டு கொண்டிருந்தபோது உஹத் மலையைப் பார்த்து ‘உஹத், எம்மைவிரும்பும் ஒரு மலை. நாம் விரும்பும் ஒரு மலை’ என்று கூறி மனிதன் – சூழல் தொடர்பை விளக்குகிறார்கள். உஹத் மலையடிவாரத்தில் நபியவர்களுக்கு மிக விருப்பமான ஹம்ஸா (ரழி) மற்றும் 70 ஸஹாபிகள் மரணித்திரிந்தும் நபியவர்கள் அம்மலையைப் பார்த்து தனது அன்பைகூறியிருப்பது சுற்றுப் புறச்சூழல் – மனிதன் தொடர்பு அன்பினால் பிணைக்கப்படுகிறது என்பதை காட்டி நிற்கிறது.
• சூழலும் சட்டத்துறையும்
பிக்ஹ் எனப்படும் இஸ்லாமிய சட்டப்பகுதியிலும் முஸ்லிம் அறிஞர்கள் சூழலை தொடர்புப்டுத்தி பல இடங்களில் உரையாடல்களை நகர்த்தியிருக்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படை வணக்கங்களான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்றன சூழலுடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டன. தொழுகை நீர், சுத்தத்துடன் தொடர்புபடுகிறது. நோன்பு உணவுடனும் நுகர்வுப் பண்டங்களுடனும் தொடர்புபடுகிறது. ஸகாத் விலங்குகளுடனும் இன்னோரன்ன தாவர உற்பத்திகளுடனும் தொடர்புபடுகிறது. உப்பு உற்பத்தி, தேனி, மாணிக்கம் போன்றவற்றுக்கான ஸகாத் இன்று உரையாடப்படுகின்றது. ஹஜ் கடமையில் ஹரம் சூழல், வேட்டையாடல், மரங்களை வெட்டுதல் போன்றன உரையாடப்படுகின்றன. இஸ்லாமிய பிக்ஹில் தரிசு நிலங்களை உயிர்ப்பித்தல், பொதுசொத்துக்களான நீர், நெருப்பு, புல்வெளிகள் என்பவற்றை உடமையாக்கிக் கொள்ளல், போராட்டங்களின் போது சூழலைபாதுகாத்தல் பற்றிய வழிகாட்டல்க்ளை வழங்கள் போன்ற விவகாரங்கள் சட்டப் புத்தகத்தில் அதிகம் விவாதிக்கப்டுகின்றன.
முஸ்லிம் அறிஞர்கள் முன்வைத்திருக்கும் பல சட்ட விதிகள் சூழல் பாதுகாப்புடன் இறுக்கமான தொடர்பை கொண்டுள்ளன. பின்வருவன அவற்றுள் சில:
- தீங்கு முடியுமான அளவு நீக்கப்படும்
- ஒரு தீங்கு அதனை ஒத்ததொரு தீங்கால் நீக்கப்பட மாட்டாது
- உயர்ந்ததொரு தீங்கை நீக்குவதற்காக தாழ்ந்ததொரு தீங்கு சகித்துக் கொள்ளப்படும்
- கடுமையற்ற தீங்கு மூலம் கடுமையான தீங்கு நீக்கப்படலாம்
- குறைந்த தீங்கு தேர்ந்தெடுக்கப்படும்
இது போன்ற சட்டவிதிகள் இன்று பல இஸ்லாமிய அறிஞர்களாலும் சூழல் சார்ந்த உரையாடல்களில் பிரயோகிக்கப்படுகின்றன.
இஸ்லாமிய சட்டப்பகுதிகளில் குற்றங்களுக்கான தண்டனைகள் இரு வகைப்படுகின்றன. ஒன்று தண்டனைகள் வரையறுக்கப்பட்ட ‘ஹுதூத்’ தண்டனைகள். மற்றையது தண்டனைகள் வரையறுக்கப்படாத நாட்டின் தலைவர் தீர்மானிக்கும் ‘தஃஸீர்’ தண்டனைகள். சூழலைமாசுபடுத்தும், சீரழிக்கும் குற்றங்களுக்கன தண்டனையை இஸ்லாம் தஃஸீர் தண்டனைக்குள் கொண்டு வருவதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இன்று தோற்றம் பெற்றிருக்கும் பாரியமுதலீட்டு நிறுவனங்களும். பல்தேசிய கம்பனிகளும் சூழலுக்கு ஏற்படுத்தும் மாசு, தீங்கு பற்றியசரியான பார்வை இப்பின்னணியில் தோற்றம் பெறவேன்டியுள்ளது.
சூழலும் சட்டவாக்க முறைமையும் (உஸூலுல் பிக்ஹ்)
சட்டவாக்க முறைமையில் மகாசிதுஷ் ஷரீஆ மிக முதன்மையான பாடம். ஷரீஆவின் இலக்குகளை வகைப்படுத்தும் போது வாழ்க்கைக்கு இன்றியமையாதவையை குறிக்க’ழரூரிய்யா’ என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. ‘அத்தியவசியமானவை’ எனலாம். மார்க்கம், உயிர், பரம்பரை, சொத்து, அறிவு ஆகிய ஐந்தையும் பாரம்பரிய இஸ்லாமிய அறிஞர்கள் ழரூரிய்யாத் இனுள் அடக்குகின்றனர். இவர்கள் சூழல் பாதுகாப்பை உள்ளடக்கவில்லை. எனினும் மேற்கூறிய ஐந்தும் சூழலுடன் தொடர்புபடுகின்றன என்பதை ஏற்பதுடன் தொடடர்புபடுத்தி விளக்கியும் வந்துள்ளனர். உதாரணமாக உயிரைப் பாதுகாத்தல் எனும்பகுதியில் வளி மண்டலம் மாசடைதல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மனிதனை மெதுவாக கொல்கிறது என்கின்றனர். மாற்றமாக, நவீன கால அறிஞர்கள் சூழல் பாதுகாப்பை மகாசிதுஷ் ஷரீஆவின் ழரூரிய்யாத் பகுதியில் ஐந்துடன் ஆறாவதாக உள்ளடக்க வேண்டும் எனவாதிடுகின்றனர். சூழலை மாசுறச் செய்வது மகாசிதுஷ் ஷரீஆவின் ழரூரிய்யாத் பகுதிகளையே கேள்விக்குறியாக்குகிறது என்பதும் அறிஞர்களது கருத்தாகும்.
சூழலும் அல்குரான், சுன்னா சார்ந்த கலைகளும்
அல்குரான் சார்ந்த உலூமுல் குரான் கலையில் சூராக்களது பெயர்கள் சார்ந்ததலைப் போன்றிருக்கிறது. அல்குரானது தலைப்புக்கள் விலங்குகள், தாவரங்கள், பிரபஞ்சப்பொருட்களுடன் தொடர்புடையதாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. மாடு, கால்நடைகள், யானை, ஓடும் குதிரைகள், தேனி, எறும்பு, சிலந்தி, தீன் எனும் தாவரம், இரும்பு போன்ற சூழல்சார்ந்த தலைப்புக்களை கூறுவதுடன் சூறாக்களின் இடையிலும் சூழலியல் உரையாடல்கள் நிறைந்து காணப்படுகின்றன. சூழலில் மிக அற்பமாக கருதப்படும் ஈ பற்றியும் அல்குரான்பேசுகிறது. சூழல் நிகழ்வுகளான மழை, புயல், இடி, சூரிய ஒட்டம் என்பவற்றுடன் இரவு, பகல்மாறி மாறி வரல், அதிகாலை போன்ற விடயங்களையும் பேசுகிறது. இயற்கை காட்சிகளையும், உலக நடப்புகளையும் அல்குரான் பல இடங்களில் காட்சிப்படுத்துகின்றது.
ஹதீஸ் தொகுப்புக்களின் உள்ளடக்கங்களது தலைப்புகள் ஹதீஸ்களும் சூழலுடன் இறுக்கமான பிணைப்பை கொண்டிருந்தன என்பதற்கான ஆதாரமாய் அமைகின்றன. கிதாபுத்தஹாரா, கிதாபுல் முசாகாத், கிதாபுல் முஸாரஆ, கிதாபுல் அத் இமா, கிதாபுத் திப், கிதாபுல்அதப்… போன்ற தலைப்புகள் சூழல் பாதுகாப்பு தலைப்புடன் தொடர்புபடுகின்றன. நபியவர்களது வாழ்வு பற்றி பேசும் சீரா புத்தகங்கள் கூட நிகழ்வுகளை சூழல் பாதுகாப்புடன் இணைத்துப் பார்க்கின்றன. உதாரணமாக நபியவர்கள் சிறுவயதில் ஹலீமாவுடன் கிராமப்புறசூழலுக்கு அனுப்பப்ப்டல் கிராமப்புற வாழ்வின் தூய்மையான சூழலையும் அது குழந்தைகள் உள்ளத்திலும் மனோநிலையிலும் ஏற்படுத்தும் மாற்றத்தையும் கூறுவதாக உள்ளது எனஅறிஞர்கள் விளக்குவர்.
சூழல் பாதுகாப்பு இன்றைய உலக ஒழுங்கில் ஓர் சவால் மிக்க பணியாக கருதப்படுகின்றது. பொருளதாரமயமான, இலாபமீட்டலை இலக்காகக் கொண்ட உலக ஒழுங்கில் காடுகள் அழிக்கப்படுகின்றன, நீர் மாசுபடுத்தப்படுகின்றது, வளி மண்டலம் எல்லை மீறிய புகைகாரணமாக மாசடைகிறது, எண்ணெய், கழிவுகள் நீர் நிலைகளுக்கு அனுப்பப்படுகின்றது. இவையெல்லாம் இன்றிருக்கும் மிக முக்கிய சவால்கள். இப்பின்னணியில் சூழல் பாதுகாப்பு நான்கு வகைகளில் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என அப்துல் மஜீத் நஜ்ஜார் கூறுகிறார்:
- சூழல் அழிவுறாமல் பாதுகாத்தல்
- சூழல் மாசுபடாது பாதுகாத்தல்
- மிகை நுகர்வை விட்டும் சூழலை பாதுகாத்தல்
- அபிவிருத்தி செய்வதன் மூலம் சூழலை பாதுகாத்தல்
மேலே சுருக்கமாக விளக்கியதிலிருந்து சூழல் சார்ந்த உரையாடலில் ஒரு முஸ்லிம் ஈடுபடுவதுகட்டாயமானது என்பது புரிகிறது. இன்றிருக்கும் சூழல் பாதுகாப்பு சார் நிறுவனங்களுடனும் அமைப்புகளுடனும் இணைந்து அவன் பணியாற்றுவது மார்க்க கடமையாக அமைகிறது எனலாம்.