இலங்கை மத்ரசா வரலாறு 19ம் நூற்றாண்டு தொடக்கம் ஆரம்பித்து, இன்று வரை நீட்சி பெற்று வந்திருக்கிறது. இலங்கை முஸ்லிம் வாழ்வொழுங்கை நெறிப்படுத்துவதிலும், இஸ்லாத்துடனான தொடர்பையும் உணர்வையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதிலும் அரபு மத்ரசாக்கள் நியாயமாக பங்களிப்பு செய்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. நீண்ட வரலாற்றுப் பங்களிப்பைக் கொண்ட மத்ரசா கல்வியொழுங்கு பற்றிய ஆழமான உரையாடல் ஒன்றின் அவசியத்தையே இக்கட்டுரை சுட்டிக் காட்டும் விடயப்பரப்புக்கள் விளக்குகின்றன. இங்கு முன்வைக்கப்படும் கலந்துரையாடலுக்கான பரப்புக்கள் எதிர்கால சீர்திருத்ததை யாசிக்கும் அதேநேரம், எதிர்கால கற்கைகளுக்கான ஓர் எட்டாகவும் அமையலாம் எனக் கருதுகிறோம்.
1- மத்ரசாக்களது வரலாறு
இலங்கை மத்ரசாக்கள் பற்றிய ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் ஆய்வுகள், புத்தகங்களைத் தேடிப்பார்க்கும் போது போதாமை நிலவுவதை அவதானிக்கலாம். நூற்றாண்டு கடந்த நிறுவன ஒழுங்கின் வரலாறு தொகுக்கப்படல் எமது முதன்மையான பணிகளில் ஒன்றாக அமைதல் பல வகைகளிலும் பயன் தரக்கூடியது. ஆய்வாளர் MMM மஹ்ரூப் போன்றவர்கள் இது பற்றிய உரையாடலை ஆரம்பித்து வைத்தார்கள். உதாரணமாக, 1995 இல் பிரசுரிக்கப்பட்ட அவரது The ‘Ulama’ in Sri Lanka 1800-1990: Form and Function எனும் கட்டுரை மிக முக்கியமான ஒன்று. துரதிஷ்டவசமாக, தொடர்ந்து வந்த காலப்பகுதியில் இவ்வகையான அறிவுபூர்வமான உரையாடல்களை மிக அரிதாகவே கண்டு கொள்ள முடிகிறது.
மத்ரசா கல்வி நிறுவனம் எவ்வகையான சூழமைவில் கருக்கொண்டது, தோற்றம்பெற்றது, அது சுமந்திருந்த பாடத்திட்டம், இலக்கு, அது எதிர்கொண்ட சவால்கள், அதனது சாதனைகள் மற்றும் மத்ரசா கல்வி ஒழுங்கின் வளர்ச்சிக்கு பங்களித்தவர்கள் என பல விடயங்களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. தோற்றம் பெற்ற மத்ரசா ஒழுங்கு காலப்போக்கில் எவ்வாறான மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டது, ஏற்பட்ட மாற்றங்கள், சீர்திருத்த முயற்சிகள் என இன்னொரு பக்கமும் அது நீள வேண்டியுள்ளது. ஆய்வாளர் ARM இம்தியாஸுடைய “Islamic Identity Formation, Madrasas, and Muslims in Sri Lanka” போன்ற கட்டுரைகள் மேலே கூறப்பட்ட வரலாற்றெழுதுகையில் துணைநிற்கக்கூடிய கட்டுரைகள் எனலாம்.
2- சிந்தனை முகாம்களுக்கிடையிலான உரையாடல்
இலங்கை முஸ்லிம் சமூகத்தினுள் வித்தியாசப்பட்ட போக்குகள், சிந்தனைகள், அமைப்புக்கள், இயக்கங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றப்பாட்டோடு மத்ரசா ஒழுங்கிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன எனலாம். இயக்கங்கள் தாம் பற்றிக் கொண்ட சமூக மாற்ற முறைமையை தலைமைதாங்கி கொண்டு செல்லும் மார்க்க அறிஞர் பரம்பரை பற்றி சிந்தித்ததன் விளைவாக, இயக்கங்கள் பின்பற்றிய சிந்தனை முறைமையை அடியொட்டிய மத்ரசாக்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் தோற்றம்பெற ஆரம்பித்தன. குறிப்பாக, சூபித்துவ சிந்தனை, தப்லீக் சிந்தனை, சலபிய சிந்தனை மற்றும் நடுநிலை சிந்தனை என்ற நான்கு வகை சிந்தனைப் பள்ளிகளினதும் பரவல் மிக அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம். அத்துடன் சேர்த்து ஷீஆ கொள்கை சார்ந்த மத்ரசாக்களும் ஓரளவில் தோற்றம்பெற ஆரம்பித்தன.
இலங்கை முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுடனான தொடர்பு, சகவாழ்வு பற்றி வலியுறுத்திக் கூறியளவு முஸ்லிம்கள் மத்தியிலான உறவு பற்றி பேச மறந்து விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. இங்குதான், மத்ரசாக்களுக்கிடையிலான உரையாடல் தொலைந்து போகிறது. ஒரு கட்டத்தில் அமைப்புகள், இயக்கங்களுக்கிடையிலான முருகல்நிலை உக்கிரமடைந்து, சண்டை, கத்தி எனும் பாவநிலைக்கு வந்தடைந்ததை நாம் மறந்துவிடக் கூடாது. தொழிநுட்ப காலத்தில் இருக்கும் நாம், முகப்புத்தகம் போன்ற உரையாடல் தளங்களில் விவாதம் என்ற பெயரில் பரப்பப்படும் வெறுப்பு மற்றும் எதிர்ப்பை எவ்வாறு கையாள்வது என்பதில் முஸ்லிம் சமூகம் தடுமாறிக் கொண்டிருப்பதைக் காணலாம். இங்கு, மத்ரசாக்களுக்கிடையிலான கலந்துரையாடல், ஒரு சாராரை இன்னொரு சாரார் புரிந்துகொள்ளல் என்பன அவசியப்படுகின்றன. குறிப்பிட்டதொரு சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவர்கள் எவ்வாறான ஆய்வுமுறைமையைப் பின்பற்றுகின்றனர், மத்ரசா சுவர்களுக்குள்ளாள் அவர்களது அன்றாட கற்றல், கற்பித்தல் உள்ளடங்களான இதர செயற்பாடுகள் எவ்வாறிருக்கின்றன போன்ற விடயங்கள் பற்றிய அறிவு பரஸ்பர புரிந்துணர்வை தோற்றுவிக்கும் எனக கருதலாம். உதாரணமாக, மத்ரசா கல்வி பற்றிய உரையாடலில் அதிக ஈடுபாடுகாட்டிவரும் பேராசிரியர் இப்ராஹிம் மூஸாவுடைய “What is Madrasa?” என்ற புத்தகம் இந்திய துணைக்கண்டத்தின் தேவ்பந்த் சிந்தனைப் பள்ளி மத்ரசாக்கள் பற்றிய அழகானதொரு புரிதலைத் தருகிறது. இலங்கையிலிருந்தும் இவ்வாறான ஆய்வுகள், எழுத்துக்கள் உருவாக வேண்டியுள்ளது போல, குறிப்பிட்ட சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் இன்னொரு சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த மத்ரசாக்களுக்கான தற்காலிக பரிமாற்றமும் இடம்பெறுவது பற்றியும் சிந்திக்கலாம். கல்வித்துறை சார்ந்த நிபுணர்கள் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியிலான தற்காலிக பறிமாற்றம் எனும் கருத்தாக்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.
3- உள்ளக சீர்திருத்தம் ஒன்றின் தேவை
மத்ரசா சீர்திருத்தம் பற்றி பேசும் அறிஞர்கள் இரு வகை சீர்திருத்தங்களை விளக்குகின்றனர். அரசு, அதன் மத விவகார அமைச்சு புறத்திலிருந்து வரும் சீர்திருத்தம் அல்லது மேலிருந்து நிர்ப்பந்திக்கும் சீர்திருத்தம் எனவும் இதனைக் கூறலாம். இக்கட்டத்தில் மத்ரசாக்கள் விரும்பியோ விரும்பாமலோ கட்டளைகளை, சட்டங்களை நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இவ்வகையான சீர்திருத்தம் ஆரோக்கியமான, எதிர்பார்க்கும் விளைவுகளைத் தரப்போவதில்லை என ஆய்வாளர் முஹம்மத் அபூ நிமர் போன்றவர்கள் கருதுகின்றனர். வெளியிலிருந்து வரும் அழுத்தம் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளடங்களாக மத்ரசா சூழலிலும் அதன் கலாச்சாரத்திலும் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தாது என அவர்கள் வாதாடுகின்றனர். மாற்றமாக, பொய்யான தரவுகள் கொண்ட அறிக்கைகளே சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறுகின்றனர்.
அடுத்த வகை சீர்திருத்தம் உள்ளக சீர்திருத்தமாகும். மத்ரசா தன்னையே மீள்வாசித்துக் கொள்ளும் பொறிமுறையினூடாக இவ்வகை சீர்திருத்தம் தோற்றம் பெறுகிறது. அது இயல்பாக நடைபெறும் ஒரு செயற்பாடு. தனிமனிதன் தன்னை மீள்வாசித்துக் கொள்வதுபோல இங்கு நிறுவனமொன்று தன்னை மீள்வாசித்து, மீலொழுங்குபடுத்திக் கொள்கிறது. நிறுவனம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், அதன் அடைவுகள், ஆசிரியர்களது நிலை, நிறுவனம் வழங்கும் கற்கை மீதான மாணவர்களது ஆர்வம், ஈடுபாடு, அண்மையில் பட்டம்பெற்று வெளியேறிய மாணவர்களது நிறுவனம் பற்றிய மனோநிலை போன்ற பல பகுதிகளையும் ஆய்வுக்குட்படுத்துவது உள்ளக சீர்திருத்தத்துக்கு வழிவகுக்கிறது.
4- இஸ்லாமிய மூலாதாரம் மற்றும் நடைமுறை சார்ந்த உரையாடல்
மத்ரசாக்களது பாடத்திட்டம் சார்ந்த கலந்துரையாடல் உள்ளக சீர்திருத்தத்தின் மையப்புள்ளி எனலாம். பெரும்பாலான மத்ரசாக்கள் ஆரம்ப கால அறிஞர்களது புத்தகங்களை அடிப்படையாக வைத்தே பாடங்களை போதிக்கின்றன. சில மத்ரசாக்கள் நவீன கால அறிஞர்களையும் உள்வாங்கியிருக்கின்றன. இங்கிருக்கும் பிரச்சினை கற்பிக்கப்படும் விடயங்களுக்கும் வாழும் சூழமைவு, உலக ஒழுங்குக்கும் இடையிலான பாரிய இடைவெளி. உதாரணமாக, அல்குர்ஆன் போதனையை எடுத்துக் கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சில சூராக்கள் கற்பிக்கப்படுகின்றன. தப்சீர்களான இப்னு கசீர், ஜலாலைன் போன்ற தப்சீர்கள் போதிக்கப்படுகின்றன. அல்குர்ஆன் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை முன்வைக்கின்றது, அது அனைத்து விவகாரங்களையும் விளக்குகிறது என்ற கருத்தும் வலியுறுத்திக் கூறப்படுகிறது. எனினும், கற்கும் மாணவர்களிடத்தில் இன்றிருக்கும் சூழல்மாசடைதல் சார்ந்த பிரச்சினைக்கு அல்குர்ஆன் முன்வைக்கும் தீர்வு என்ன? இன்று மேற்குலகில் ஆதிக்கம் பெற்று வரும் குடும்பக் கட்டமைப்பு சார்ந்த உரையாடல்களை அல்குர்ஆனின் ஒளியில் எவ்வாறு புரிந்துகொள்ளலாம்? போன்ற கேள்விகளை முன்வைக்கும் போது அல்குர்ஆன் மீதான ஒட்டுமொத்தப்பார்வை மாணவர்களுக்கு வழங்கப்படுவதில் பாரிய போதாமை நிலவிவதை அவதானிக்கலாம். நவீன கால அறிஞரான தாஹா ஜாபிர் அல்வானியுடைய புத்தகங்கள் இவ்வகையான சிக்கலை விரிவாக விளக்குகின்றன.
இஸ்லாமிய கற்கையில் கற்பிக்கப்படும் ஹதீஸ், பிக்ஹ், உசூல் அல்-பிக்ஹ், அகீதா, சீரா போன்ற பாடங்கள் மாணவர்களை எமது வரலாறு நோக்கிக் கூட்டிச் செல்வதுபோல, இன்றிருக்கும் நாம் வாழும் சூழமைவு நோக்கியும் பயணிக்கத் தூண்ட வேண்டும். உசூல் அல்-பிக்ஹில் “இஜ்மா” என்ற கருத்தாக்கம் இன்றைய தொழிநுட்ப காலத்தில் எவ்வகையில் சாத்தியமானது? சீராவில் இறைத்தூதரது (ஸல்) “ஆட்சியாளர்” எனும் பாத்திரத்தை எமது சூழமைவில் எங்கு பொருத்துவது? ஹதீஸ் பாடப்பரப்பில் வரும் “இறைநிராகரிப்பாளர்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்களுக்கு நான் பொறுப்பாளரல்ல” என்ற கருத்தில் வரும் அறிவிப்பை எமது நாட்டில் எவ்வாறு புரிந்துகொள்வது? போன்ற கேள்விகள் சில உதாரணங்கள் மாத்திரமே. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், இஸ்லாமிய மூலாதாரங்களை எமது சூழமைவுடன் உரையாட வைத்தல் எனலாம். அவ்வகையான உரையாடலுக்கு மாணவர்களைப் பயிற்றுவிக்கும் களமாக மத்ரசா கல்வியை ஒழுங்குபடுத்தலே இங்கு வலியுறுத்தப்படும் கருத்தாகும்.
5- விமர்சன ரீதியான சிந்தனை
விமர்சன சிந்தனை என்பது இன்று கல்வியலாளர்களால் அதிகம் பேசப்படும் ஒரு கருத்தாக்கம். இதனை இஸ்லாமிய கற்கைகளில் பிரயோகிப்பது எவ்வாறு என்பதே இங்குள்ள கேள்வி. இஸ்லாத்தில் திட்டவட்டமாக நிறுவப்பட்ட விடயங்களில் விமர்ச ரீதியான சிந்தனையைப் பிரயோகிக்க வேண்டிய தேவை இருக்காது எனலாம். அதன் கருத்து அறிவைப் பிரயோகிக்கக் கூடாது என்பதல்ல. உதாரணமாக, அல்லாஹ் இருக்கிறான் என நம்புதல், மறுமை நாளின் அவசியம் போன்ற இஸ்லாத்தின் மிக அடிப்படை நம்பிக்கைகளை ஒரு மனிதன் அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ளும்போதே அவனது நம்பிக்கை ஆழம் காண்கிறது. இப்பகுதிகளை விட கிளைப்பகுதிகளில், வித்தியாசப்பட்ட கருத்துக்களைக் கொடுக்க முடியுமான பகுதிகளில் விமர்சன ரீதியான சிந்தனையின் தேவை அதிகமாக உணரப்படுகிறது. குறிப்பாக, இலங்கை போன்ற முஸ்லிம்கள் மிக சிதரிய சிறுபான்மையாக வாழும் சூழமைவில், இஸ்லாமோபோபியா அதன் வீச்செல்லையை விரிவாக்கியிருக்கும் தருணத்தில் இஸ்லாத்தின் தூதை எவ்வாறு முன்வைப்பது என்ற கேள்வியிலிருந்து அவ்விமர்சன சிந்தனை துளிர்விடுகிறது. ஒரு சமூகமாக இஸ்லாத்தின் எப்பகுதியை முதன்மைப்படுத்த வேண்டும், முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் நிலவும் கருத்துவேறுபாடுகளை எவ்வாறு கையாள்வது, சிறுபான்மைக்கான வாழ்வொழுங்கு எவ்வாறு அமையப்பெற வேண்டும், முஸ்லிம் தலைமைத்துவத்தின் தீர்மானங்கள் எவ்வாறான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன, இஸ்லாமிய இயக்கங்களது சிந்தனை, நடைமுறைகளை எவ்வாறு விமர்சன ரீதியாகப் புரிந்துகொள்வது போன்றன சில கேள்விகள்.
இதனை இஸ்லாமியப் பரிபாஷையில் கூறுவதாக இருந்தால் ஒரு வகை “இஜ்திஹாத்” எனலாம். விமர்சன சிந்தனையை சிலர் அவசியமற்றதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும் கருதுகின்றனர். இதனை அவ்வாறு பார்க்க வேண்டியதில்லை. விமர்சன சிந்தனை இன்னொரு பார்வை. கருத்துக்களும் சிந்தனைகளும் ஒன்றோடொன்று உறவாடும் போதுதான் புதிய பாதைகள் தோற்றம்பெறுகின்றன. மத்ரசா மாணவர்கள் விமர்சன சிந்தனைக்கு பயிற்றுவிக்கப்படுவதில் அவர்களது சிந்திக்கும் ஆற்றல் விருத்தியடைவது போல, முரன்பட்ட சிந்தனைகளை ஆரோக்கியமான உரையாடலுக்கு உள்ளாக்கும் மனோநிலையும் அவர்களினுள்ளால் பாய்ச்சப்படுகிறது.
இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் ஐந்து விடயங்களும் இலங்கை மத்ரசா கல்வியமைப்பு சார்ந்து கவனம் குவிக்க வேண்டிய விடயப்பரப்புக்களுள் சில மாத்திரமே. மத்ரசா கல்வியமைப்பு பற்றிய மிக சீரியசான உரையாடலொன்றை துவக்கி வைப்பதற்கான ஆரம்ப எட்டுக்கான கவனக் குவிப்புக் கட்டுரையாகவே இவ்வெழுத்துக்கள் அமைகின்றன என்பதையும் கருத்திற் கொள்வோம்.
3 Comments
இலங்கை மத்ரசாக்களின் வரலாறு மற்றும் அவற்றின் பங்களிப்பு பற்றிய இக்கட்டுரை மிகவும் சிந்தனைக்குரியது. மத்ரசாக்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளன என்பது தெளிவாகிறது. இந்த ஆய்வு எதிர்கால சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டும் என நம்பப்படுகிறது. மேலும், இது மத்ரசா கல்வி ஒழுங்கின் வரலாற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. இலங்கை மத்ரசாக்களின் பாடத்திட்டம் மற்றும் சவால்கள் பற்றி மேலும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளதா? Given the growing economic instability due to the events in the Middle East, many businesses are looking for guaranteed fast and secure payment solutions. Recently, I came across LiberSave (LS) — they promise instant bank transfers with no chargebacks or card verification. It says integration takes 5 minutes and is already being tested in Israel and the UAE. Has anyone actually checked how this works in crisis conditions?
இலங்கை மத்ரசாக்களின் வரலாறு மற்றும் அவற்றின் பங்களிப்பு பற்றிய இக்கட்டுரை மிகவும் சுவாரஸ்யமானது. மத்ரசாக்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல் மற்றும் இஸ்லாமிய அடையாளத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஆய்வு மத்ரசா கல்வி முறையின் வளர்ச்சி மற்றும் அதன் சவால்களை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. எதிர்காலத்தில் மத்ரசா கல்வி முறையில் என்ன மாற்றங்கள் ஏற்படலாம்? Recently, I came across a program for GPT-generated text (генерация текста) in Russian. The cool part is that it runs locally on your own computer, and the output is actually unique and quite decent. By the way, I hope the content on your site isn’t AI-generated?
இலங்கை மத்ரசாக்களின் வரலாறு மிகவும் பிரம்மாண்டமானது மற்றும் முக்கியமானது. இந்த கல்வி நிறுவனங்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வாழ்வில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆய்வாளர்கள் மத்ரசாக்களின் பங்களிப்புகளை ஆராய்ந்தாலும், இன்னும் பல தகவல்கள் கிடைக்கவேண்டும். மத்ரசா கல்வியின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் எவ்வாறு பங்களிக்கலாம்? German news in Russian (новости Германии)— quirky, bold, and hypnotically captivating. Like a telegram from a parallel Europe. Care to take a peek?