பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல்-குர்ஆனை ஓதலாமா என்ற கேள்வியை சமீபத்தில் பலர் கேட்டிருந்தனர். இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாணவிகளுக்கும் குர்ஆனை மனனம் செய்த பெண்களுக்கும் ஏனைய பல சந்தர்ப்பங்களில் பொதுவாக பெண்களுக்கும் இது குறித்து தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது.
‘மாதவிடாய் பெண்கள்’ குர்ஆனை ஓதுவது குறித்து அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுவதால் குறித்த விடயத்தை எப்படி அணுக வேண்டும் என்ற ஒரு தெளிவை பெறுவதற்காக இந்த ஆக்கத்தை முன்வைக்கின்றோம்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது சம்பந்தமாக மூன்று சிந்தனைகள் உள்ளன.
ஒன்று : மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது கூடாது.
இரண்டு : மாதவிடாய் பெண்கள் அல்-குர்ஆனை ஓதலாம்
மூன்று : ஒரு ஆயத்தை விட குறைவாக ஓதலாம்
1. மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது கூடாது
பெண்கள் மாதவிடாய் காலத்தல் குர்ஆனை ஓதுவது கூடாது என்பதே இமாம் ஷாபிஈ மற்றும் இமாம் ஹனபி சிந்தனைப் பிரிவுகளின் தீர்ப்பாக உள்ளது.
ஆனால் குர்ஆனை கற்றுக் கொடுக்கும் ஆசிரியையாக இருந்தால் ஒவ்வொரு வார்த்தை வார்த்தையாக ஓதிக் கொடுப்பதற்கு ஹனபி மத்ஹபில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹன்பலி மத்ஹபின் பிரபல்யமான கருத்து ஓதக் கூடாது என்பதே. அதன் பொருள் மாதாந்த உபாதைக்குள்ளான காலத்தில் குர்ஆனை ஓதுவது ஆகும் என்ற சிந்தனையும் அந்த மத்ஹபின் அறிஞர்களிடம் காணப்படுகிறது.
மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது கூடாது என்ற சிந்தனை முகாமைச் சேர்ந்தவர்கள் அதற்கு ஆதாரமாக பல ஹதீஸ்கள் முன்வைக்கின்றனர்.
அதில் மிகவும் பிரபல்யமானது இப்னு உமர் ரழி அவர்கள் அறிவிக்கும்
மாதாந்த இயற்கை உபாதைக்குள்ளான பெண்களும் குளிப்பு கடமையான ஆண்களும் அல்-குர்ஆனிலிருந்து எதையும் ஓத வேண்டாம்' என்ற ஹதீஸாகும்.
இது பலவீனமானதொரு ஹதீஸாகும். இதே கருத்துடைய இன்னும் பல ஹதீஸ்கள் வெவ்வேறு வழிகளில் வந்துள்ளன. அவை அனைத்தும் ஆதாரம் காட்ட முடியாத பலவீனமான ஹதீஸ் என்பதே ஹதீஸ் கலை வல்லுனர்களின் கருத்தாகும்.
இந்த ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர் வரிசையும் பலவீனமாதே என இப்னுல் ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹூல் பாரியில் பதிவு செய்துள்ளார்கள்.(1/409) மேலும் ‘இந்த ஹதீஸ் அறிஞர்களின் ஒட்டுமொத்த கருத்துப்படி பலவீனமான ஹதீஸ்’ என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பதாவா 21/460) நவீன காலத்தில் அல்லாமா அல்பானி (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸ் ‘முன்கர்’ என்ற தரத்திலுள்ள பலவீனமான ஹதீஸ் என கூறியுள்ளார்.(அல்இர்வா 495)
ஜனாபத் எனும் குளிப்பு கடமையானவர் அல் குர்ஆன் ஓதக் கூடாது என்பது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும். எனவே ஜனாபத் உடையவரின் சட்டமே மாதவிடாய் ஏற்படும் பெண்ணுக்குமுரிய சட்டமாகும் என மேற்குறித்த அறிஞர்கள் கூறுகின்றனர். இது குளிப்பது கடமை எனும் விடயத்தில் ஜனாபத் உடையவரும் மாதவிடாய் உடைய பெண்ணும் ஒன்றாவர் என்ற ஒப்பீட்டு அடிப்படையில் கூறப்படும் ஆதாரமாகும்.
இந்த ஒப்பீடு குறித்து சட்ட அறிஞர்களின் விமர்சனங்கள் பின்வருமாறு உள்ளது:
மாதவிடாய் பெண்ணையும் குளிப்புக் கடமையானவரையும் வேறுபாடுகள் உள்ள நிலையில் சமமாக ஒப்பிடுவது தவறாகும். இருவருக்கும் வித்தியாசங்கள் பல உள்ளன. குளிப்பு கடமையானவருக்கு உடனே குளித்து விடலாம். அல்லது தொழுகை நேரம் வந்தவுடன் தொடக்கை நீக்கி விடலாம். ஆனால் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குறிப்பிட்ட சில நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்நிலையில் இருவரையும் ஒப்பிடுவது சட்ட ஒழுங்கிற்கு முரணாகும்.
மேலும் குளிப்பு கடமையான ஒருவர் குர்ஆன் ஓத முடியும் என்ற சிந்தனையை முன்வைக்கும் அறிஞர்களும் உள்ளனர். உமர் ரழி அவர்கள் ஜனாபத் உடையவர் குர்ஆன் ஓதுவது வெறுக்கத்தக்கது (மக்ரூஹ்) என்றும் இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் குளிப்பு கடமையானவர் குர்ஆனை ஓதுவது பரவாயில்லை என்றும் கூறியுள்ளனர். ழாஹிரி சிந்தனை முகாமில் உள்ளவர்கள் குளிப்பு கடமையானவர் குர்ஆனை ஓதுவது ஆகும் என்றே பத்வா வழங்கியுள்ளனர்.
இத்தகைய வேறுபாடுகள் உள்ள நிலையில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் குளிப்பு கடமையானவரையும் ஒப்பிட்டு ஆதாரம் காட்டுவது சட்ட மூலாதாரங்களின் மரபுக்கு புறம்பானதாகும்.
ஜம்இய்யாவின் பத்வா
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா குழுவானது பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல் குர்ஆன் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை கூறும் போது, அல் குர்ஆன் ஓதும் விடயத்தில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. மாலிக் மத்ஹபின் கருத்து மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓத முடியும் என்பதை ஜம்இய்யாவின் பத்வா உதாரணமாக எடுத்துக் கூறுகிறது. தொடர்ந்து ஏனைய மத்ஹப்களின் கருத்துக்களை முன்வைத்ததன் பின்னர் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அல் குர்ஆன் ஓதுவது கூடாது என ஜம்இய்யாவின் பத்வா குழு தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் பெண்கள் தாம் குர்ஆனில் மனனம் செய்த பகுதி மறந்து போகும் என்பதைப் பயந்தால் மாதவிடாயுடைய காலத்தில் குர்ஆனை மீட்டிக்கொள்வதற்கு பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம் என நான்கு வழிமுறைகளை தந்துள்ளது. குர்ஆனை அதிகமாகச் செவிசாய்த்தல், தான் ஓதும் சப்தம் தன் காதுகளுக்குக் கேட்காத விதத்தில் உதடுகளை மாத்திரம் அசைத்து ஓதுதல், மனதால் ஓதுதல், குர்ஆனுடைய நிய்யத்திலன்றி, துஆ மற்றும் திக்ருடைய நிய்யத்தில் ஓதுதல் என்பதே அந்த வழிமுறையாகும் என அந்த பத்வா கூறுகிறது.
2. பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓத முடியும்
பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவதை விட்டும் ஒருபோதும் தடுக்கப்பட மாட்டாள் என்பதே அநேகமான அறிஞர்களின் சிந்தனையாகும்.
இந்த சிந்தனையை ஸஹாபாக்கள் காலம் தொட்டு நவீன காலம் வரையுள்ள அறிஞர்கள் ஆதரித்தே வந்துள்ளனர்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் எந்த நிபந்தனைகளுமின்றி குர்ஆனை ஓதலாம் என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் ஈராக்கில் வாழும் காலத்தில் பத்வா வழங்கியுள்ளார்கள்.(மஜ்மூ2/387)
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் ஒரு அறிவிப்பு குர்ஆன் ஓதலாம் என்ற சிந்தனையை ஆதரித்தே வந்துள்ளது. (இஃலாமுல் முவக்கிஈன் 3/25) குர்ஆன் ஓதலாம் என்ற இந்த கருத்தை இமாம் இப்னு ஹஸம் தனது அல்முஹல்லாவில் பதிவு செய்துள்ளார்கள். (1/77)
நபித் தோழரான முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களிடம் அப்துர் ரஹ்மான் பின் கனம் (ரழி) அவர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதலாமா? என்று கேட்டபோது, ஆம் ஓதலாம். யார் அதனை தடுக்கின்றாரோ அவர் இந்த விடயம் குறித்து அறிவில்லாமல் அதனை செய்கிறார் என்றார்கள். (புகாரியின் விரிவுரை: இப்னு பத்தால் (1/423)
இமாம் ஸஈத் இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்கள் தாபியீன்கள் காலத்தில் வாழ்ந்த பிரபல்யமான ஓர் அறிஞராவார். அவரது சிந்தனையும் மாதாந்த உபாதைக்குள்ளான பெண்கள் குர்ஆனை ஓதுவது ஆகுமானது என்பதே.(முஃனி 1/106)
இமாம் இப்னு தைமியா அவர்கள் மாதாந்த உபாதைக்குள்ளான பெண்கள் குர்ஆனை தாரளமாக ஓதலாம் என்ற சிந்தனையையே தனது விருப்பத் தெரிவாக எடுத்துள்ளர்கள். மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனில் மனனம் செய்த பகுதிகள் மறக்கும் என பயந்தால் குர்ஆனை ஓதுவது வாஜிபாகும் என்ற சிந்தனையையும் அவர்கள் முன்வைத்துள்ளார்கள்.
கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் ‘பெண்களும் பள்ளிவாசல்களும்’ என்ற தனது ஆய்வு நூலில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குர்ஆனை ஓதுவது சம்பந்தமாக ஆய்வு செய்துள்ளார்கள். அவருடைய வாசிப்பில் இந்த தலைப்பு குறித்து மிக அழகான முறையில் தெளிவான விளக்கம் தந்தவர் இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்களே என அவ்தா குறிப்பிடுகிறார்.
இறுதியாக ஜாஸிர் அவ்தா அவர்கள் தனது ஆய்வின் முடிவில் மாதவிடாய் எற்பட்டுள்ள பெண்கள் குர்ஆன் ஓதுவதை தடுப்பதற்கு மிகச் சரியான தெளிவான எந்த ஆதாரமும் இஸ்லாமிய சட்டப்பரப்பில் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார். (பக்கம் 62)
இமாம் ஜவ்ஸி, இமாம் ஷவ்கானி ஆகியோரும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல்குர்ஆனை ஓதுவது ஆகும் என்பதையே ஆதரித்து பேசியுள்ளார்கள். இவ்வாறே அஷ்ஷெய்க் முஹம்மத் உஸைமின், ழாஹிரி மத்ஹபினர், மற்றும் சவுதியை தளமாக கொண்டு இயங்கும் பத்வாவுக்கான நிலையான கமிட்டியும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது ஆகும் என்றே பத்வாக வழங்கியுள்ளனர்.
அவ்வாறே அல்-குர்ஆனை பார்க்கலாம், மனனமிட்ட பகுதியை தாரளமாக ஓதலாம் என இமாம் நவவி அர்கள் தனது முஸ்லிம் ஹதீஸ் கிரந்தத்தின் விரிவுரையில் தெளிவாகவே கூறியுள்ளார். (4/290)
இமாம் மாலிக் ரஹ் அவர்கள் ‘ஒரு பெண் மாதவிடாயின் போது அல் குர்ஆன் ஓத முடியும் என்றும், அதே நேரத்தில், அப்பெண்ணுக்கு மாதவிடாய் நின்று விட்டால் குளித்து சுத்தமாகும் வரை அல் குர்ஆன் ஓதுவது கூடாது’ என்றும் கூறியுள்ளார்கள்.
ஆயிஷா ரழி அவர்கள் நபிகளாருடன் ஹஜ் கடமைகளில் இருக்கும் போது மாதாந்த உபாதைக்குள்ளானார்கள். அப்போது நபியவர்கள் தவாப் செய்வதை தவிற ஏனைய அனைத்து கிரியைகளையும் செய்யுமாறு ஏவினார்கள்.
பல நாட்கள் தங்கியிருந்து ஹஜ் கடமையை செய்யும் பெண்கள் விடயத்தில் குர்ஆன் ஓதுவது பற்றி நபிகளார் தெளிவான சட்டத்தை கண்டிப்பாக குறிப்பிட்டிருக்க வேண்டும். இருந்தும் தவாப் மாத்திரம் கூடாது என்று உறுதியிட்டு கூறியிருப்பது அல்குர்ஆனை ஓத முடியும் என்பதையே சுட்டுகிறது.
மேற்குறிப்பிட்ட கருத்துக்களை நோக்கும் போது ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், நவீன கால அறிஞர்கள் என பலரும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது கூடும் என்ற சிந்தனையை ஆதரித்தே கருத்து வெளியிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இதற்கு பிரதானமான காரணம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதுவதை விட்டும் தடுக்கக் கூடிய மிகச் சரியான தெளிவான நேரடியான எந்த சட்ட ஆதாரங்களும் ஷரீஆ சட்டப்பரப்பில் இல்லாமையாகும்.
அவ்வாறே ஸஹாபாக்களின் காலத்தில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குர்ஆன் ஓதக் கூடாது என்பதற்கான எந்தப் பதிவுகளும் கிடையாது.
எனவேதான் அதிகமான அறிஞர்கள் பெண்கள் மாதவிடாய் காலத்தில் தொழுவது ஹராம் என்றும் குர்ஆன் ஓதுவது ஆகும் என்றும் தேவைப்படும் போது குர்ஆனை தொடுவதும் ஆகும் என்றும் அபிப்பிராயங்களை தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது சிந்தனை ஒரு ஆயத்திற்கு குறைந்த பகுதியை ஓதலாம் என்ற அபிப்பிராயமாகும். இது இமாம் அபூ ஹனீபாவின் கருத்தாகும். (பதாஇஉஸ் ஸனாஇஉ 1/38)
மேற்கூறிய சிந்தனைகளை அவதானிக்கும் போது மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குர்ஆனை ஓதுவது குறித்து அறிஞர்கள் மத்தியில் வித்தியாசமான கருத்துக்கள் நிலவுகிறது என்பது தெளிவாகிறது. எனவே ஒருவர் தான் விரும்பிய ஒரு கருத்தை தெரிவு செய்யலாம். தான் தெரிவு செய்த சிந்தனைக்கு மாற்றமான கருத்தை கொண்டவருடன் விதண்டாவாதங்கள் செய்யத் தேவையில்லை. மாற்றமாக அடுத்த தரப்பின் கருத்துக்களை மதிக்கும் வகையில் நடந்து கொள்வதே பண்பாடாகும்.
இஸ்லாமிய ஷரீஆவின் கிளை அம்சங்களில் அனைவரையும் ஒரே கருத்தில் கொண்டு வரவேண்டும் என நினைப்பது இறை ஏற்பாட்டுக்கே முரணாகும். சட்டப்பகுதியின் கிளைப் பிரிவு என்பது ஒரு நந்தவனம். அங்கு வித்தியாசமான மலர்கள் இருப்பதுவே அழகு. அந்த அழகை கெடுப்பதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது.
பாடசாலைகளிலும் அறபுக் கலாசாலைகளிலும் கல்வி பயிலும் மாணவிகளுக்கும், இஸ்லாமிய கற்கைகள் துறையில் உள்ள மாணவிகளுக்கும் பெண் ஹாபிழ்களுக்கும் அல்லது வேறு சூழ்நிலைகளில் உள்ள பெண்மணிகளுக்கும் மேலே கூறப்பட்ட இரண்டாவது சிந்தனையை தெரிவு செய்வதே மிகவும் பொருத்தமானது. இஸ்லாமிய வழிகாட்டல்கள் ஒருபோதும் மக்களை கஷ்டப்படுத்துவதில்லை. மார்க்கம் இலகுவானது. இலகுபடுத்துவதையே அது தூண்டுகிறது. இலகுவானதை தெரிவு செய்வதற்கே வழிகாட்டியுள்ளது.
அவ்வாறே புனித ரமழான் காலங்களில் மாதாந்த உபாதைக்குள்ளாகும் பெண்கள் குறிப்பிட் சில நாட்கள் குர்ஆன் ஓதாமல் இருப்பது நிச்சயமாக சங்கடமான ஒரு விடயமாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் அறிஞர்களின் கருத்து வேறுபாடுகள் அருளாவே காணப்படுகிறது.
இங்கு வாசகர்கள் சில அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுள்ள விடயங்கள் நெகிழ்ந்து கொடுக்க முடியுமான விவகாரங்களாகும். அதில் விட்டுக் கொடுத்து சகிப்புத்தன்மையுடன் நடப்பதே பண்பாடாகும். மேலும் கருத்து வேறுபாடுள்ள விடயங்கள் தடுக்கப்பட வேண்டிய தீமையாகாது. சட்டப்பரப்பில் வித்தியாசமான கருத்துக் கொள்வதற்கு இடம்பாடு இருந்தால் மாற்றுக் கருத்துக் கொண்டோரை ஒருபோதும் மறுதளிக்க முடியாது.
குறித்த ஒரு மத்ஹபின் வட்டத்தில் மாத்திரம் வெறித்தனமாக பிடிவாதம் பிடிப்பது நிச்சயமாக சமூகத்தில் பேரழிவையே கொண்டுவரும். மார்க்கத்தின் கிளை அம்சங்களில் கருத்து முரண்பாடுகள் இருக்கவே செய்யும். அது இஸ்லாமிய சட்டப்பரப்பின் கிளை விவகாரங்களில் காணப்படும் இயல்பாகும்.
அனைவரும் ஒரு கருத்தில் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது நிச்சயமாக குழப்பங்கள் உருவாகுவதற்கே வித்திடும். அவ்வாறு செயற்படுவது இறை நியதிகளுக்கு முரண்பட்ட போக்காகும்.
இஸ்லாமிய சட்டப்பரப்பில் இத்தகைய கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் யாருடைய ஆதாரம் மனதிற்கு திருப்தி தரும் வகையில் உள்ளதோ அந்த வகையில் செயற்படுவதற்கு சுதந்திரம் உண்டு. காரணம் அது தனிமனித வழிபாடாகும். இது ரமாழான் நோன்பு அல்லது பெருநாள் தினத்தை நிர்ணயித்தல் போன்ற சமூகக் கடமைகள் அல்ல.
மேற்படி கருத்து வேறுபாடுள்ள சமூக கடமைகளை நிறைவேற்றும்போது தனிமனிதர்களோ பள்ளிவாயல்களோ ஊர்களோ அமைப்புக்களோ தனித்து தீர்மானம் எடுத்துத் தொழிற்படுவது சட்ட மரபுக்கு முரணாகும்.
ஆனால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது சமூகக் கடமையன்று. அது தனிமனித வழிபாடாகும். எனவே இத்தகைய விவகாரங்களில் ஒருவர் தான் விரும்பிய சிந்தனையை சுதந்திரமாக தெரிவு செய்து பின்பற்றலாம். பொது மக்கள் இத்தகைய கருத்து வேறுபாடுகளில் உள்ள நன்மைகளை பெற முடியாமல் கதவடைப்பது தான் கூடாது. தகுதிவாய்ந்த ஒவ்வொரு அறிஞரின் கருத்திலும் சிந்தனையிலும் அருளும் நலனும் இருக்கவே செய்யும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.