ஸூராவின் பெயருக்கு ஏற்ற வகையில் நூஹ் நபி பற்றியே முழு ஸூராவும் பேசுகிறது. ஸூராவின் மையக்கருத்தை “தூதை வாழவைப்பதற்கான முயற்சியும் அதற்கெதிரான மிகப்பெரும் தடைகளும்” எனக் கூற முடியும். ஸூராவின் முதல் பகுதி (01 – 04 வரையான வசனங்கள்) இறைத்தூதின் உள்ளடக்கம் பற்றியும் சூறாவின் இரண்டாம் பகுதி (05 – 20 வரையான வசனங்கள்) தூதை வாழ வைப்பதற்காக நபி நூஹ் 950 வருடங்களாக மேற்கொண்ட அர்ப்பணங்கள், தியாகங்களை மிக சுருக்கமாகவும் விபரிக்கிறது. மூன்றாம் பகுதி (21 -25 வரையான வசனங்கள்) இறைத்தூதை எத்திவைக்கும் போது நூஹ் நபி எதிர்கொண்ட மிக முக்கிய இரு சவால்களை குறிப்பிடுகிறது. கடைசிப் பகுதி (26 – 28 வரையான வசனங்கள்) தூதை சுமக்கும் புதிய பரம்பரையொன்றைத் தோற்றுவித்தல் என்ற சிந்தனையை முன்வைக்கிறது.
சூறா அரம்பமாக இறைத்தூது என்பது என்ன? என்ற கேள்விக்கு மிக சுருக்கமாக பதிலளிக்க முனைகிறது. மூன்று சொற்களினூடாக இஸ்லாமிய தூதின் அடிப்படைகளை விளக்குகிறது. அல்லாஹ்வை வணங்குதல், அவனது அன்பு மற்றும் தண்டனையை உள்ளத்தில் இருத்தி செயற்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளல், இறைதூதருக்கு கட்டுப்படல் ஆகிய மூன்று பகுதிகளும் தூதின் சாரம் எனலாம். அல்லாஹ்வை வணங்குவதன் மூலம் மனிதன் உலகப் பொருட்களுக்கோ, ஏனைய மனிதர்களுக்கோ அடிமையாவதிலிருந்து விடுதலை பெறுகிறான். மனிதன் உலகப் பிடிகளிலிருந்து விடுபடுகிறான். உலகப் பொருட்களை வணங்கி அவற்றை விட தன்னை இழிவானவனாக கருதக் கூடாது என வாதாடும் இஸ்லாம், மனிதனே இப்பிரபஞ்சத்தின் மையப் புள்ளியில் இருக்கக் கூடியவன் எனவும் அதன் நிர்வாகி எனவும் கருதுகிறது. அது அவனுக்கானதொரு கனதியான பொறுப்பு.
உலகை அழகுபடுத்துவதும், வளப்படுத்துவதும் அவன் மீதிருக்கும் கடமைகள். மிகப்பெரும் வணக்கம் அது. அமைதியானதொரு உலகை ஏற்படுத்தி, அடிப்படைத் தேவைகள் பூரணம்பெற்ற சமூகங்களைத் தோற்றுவிப்பதும் அவை தமக்கு மத்தியில் பர்ஸ்பரம் அறிமுகமாகிக் கொள்வதுடன் உதவி ஒத்தாசைகள் செய்து கொள்வதை நோக்கிய பயணம் இஸ்லாத்தின் மிகப்பெரும் இலக்குகளில் ஒன்று. இப்பயணமே இறைத்தூதின் பயணமும். இறைத்தூதர் (ஸல்) அறிமுகப்படுத்தியிருக்கும் தூது மனித தேவைகளைக் கருத்திற்கொண்ட மனிதனுக்கான வாழ்வமைப்பாகும். மனித வாழ்வுக்கு அவசியமான வணக்கங்கள், தனிமனித, குடும்ப, சமூக சட்டங்களை அது கொண்டிருக்கின்றது. மாற்றமுறா வழிகாட்டல்களையும், இடம்-சூழல் காரணிகளுக்கேற்ப மனித அறிவைப்பிரயோகித்து இஜ்திஹாத் செய்யக்கூடிய தன்மையையும் தூது கொண்டிருக்கிறது. இவ்விரு தன்மைகளினூடாக தூது இறுதிநாள் வரை தொடர்ந்தும் வாழ்கிறது, வழிகாட்டுகிறது, நடைமுறை சாத்தியமான வாழ்வமைப்பாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக கூறுவதாயின் ஏகத்துவமே தூதின் மையம் எனக் கூற முடியும். வாயால் மொழிந்துவிட்டு அமர்ந்துகொள்ளும் ஏகத்துவமல்ல. மாற்றமாக உலகுக்கு அடிமையாவதிலிருந்து தன்னை விடுவிக்கும் வாழ்வமைப்பைக் காட்டிக்கொடுக்கும் ஏகத்துவம் அது.
இறைவன் ஒருவனை வணக்கத்துக்குரியவனாகவும் பொறுப்பு சாட்டக்கூடியவனாகவும் நம்பும் மனிதன், ஏழை-பணக்காரன், உயர்ந்த சாதி-கீழ்சாதி, உயர்பதவி, அற்பமான பதவி, பிரதேசவாதம், இயக்கவாதம் போன்ற அனைத்து பிரிப்பு முறைகளையும் தாண்டி மனிதன் என்பவன் இறைவனது படைப்பு, ஆதமுடைய பிள்ளைகள் என்ற சமத்துவ பார்வை கொண்டவனாக மாறி விடுகிறான். நீதி, சமத்துவம், அன்பு போன்ற பண்பாட்டு விழுமியங்களோடு மனிதனை அணுகும் அவன், செயல்களில் சிறந்தவரே இறைவனிடம் கண்ணியத்துக்குரியவர் என்ற மிக அடிப்படையான கோட்பாட்டையும் உருவாக்கிக் கொள்கிறான். இவ்வடிப்படைக் கோட்பாட்டையும் விழுமியங்களையும் உலகில் பரப்பும் முயற்சி இலகுவானதல்ல. மிக நீண்டதொரு வேலைத்திட்டம். நூஹ் நபியின் முயற்சி இதற்கான சிறந்ததோர் உதாரணம். சூறாவின் இரண்டாம் பகுதி அவரது அர்ப்பணங்களை விளக்குகிறது.
எல்லா நபிமார்களது முயற்சிகளும் இவ்வாறே இருந்தன. இறுதித் தூதரது (ஸல்) வாழ்வு சிறந்ததொரு சாட்சி. அவரை உண்மையாளர், நம்பிக்கையாளர் என்று கூறியவர்கள் தூதைப் பகிரங்கப்படுத்தியதுடன் தலைகீழாய் நின்றனர். பொய்யர், சூனியக்காரர், வழிகெடுப்பவர் என்றெல்லாம் கூறித் திறிந்தனர். பொருளாதாரத் தடை விதித்தனர். ஏன், கொலை செய்ய கூட முயற்சித்தனர். சொந்த நாட்டை விட்டு விரட்டினர். இறுதித் தூதரின் பின் இத்தூதுக்காக பாடுபட்டவர்கள் அன்று தொடக்கம் இன்று வரை அனுபவிக்கும் துன்பங்கள், சித்திரவதைகள் பட்டியல்படுத்த முடியாதவை. நன்மை, தீமை; சத்தியம்; அசத்தியம்; உண்மை; பொய்; நீதி; அநீதி; சமத்துவம், பாரபட்சத்துக்கிடையிலான முரன்பாடு உலக நியதிகளில் ஒன்று என்பது மட்டும் உணமை.
ஏகத்துவத்தை அதன் விரிந்த தளத்தில் புரிந்து நீதி, சமத்துவம் போன்ற அடிப்படைப் பண்பாட்டுப் பெருமானங்களுக்காக உழைக்கும் போது அத்தூது மூலம் பாதிக்கப்படுபவர்கள் அதனை எதிர்க்க முனைகின்றனர். எதிர்ப்பதற்குத் தலைமை தாங்குகின்றனர். இப்பிரிவினர் பற்றியே சூறாவின் மூன்றாம் பகுதி பேசுகிறது. குறிப்பாக, பிழையான தலைமைத்துவம் சமூகத்தையே வழிகெடுத்துவிட்டதாக சூறா கூறுகிறது. “நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கடவுள்களை தொடர்ந்தும் வணங்குங்கள்” என்பதே அவர்களது உபதேசமாக இருந்தது. இத்தலைவர்கள் ஏகத்துவம் கொண்டுவரும் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் எனும் செய்தி தமது சமூக அந்தஸ்த்தில் ஏற்படுத்தப்போகும் பாதிப்பைக் கவனமாகப் புரிந்திருந்தனர். அதனைப் பாதுகாத்து, அடிமை மனோநிலை கொண்ட மக்கள் கூட்டமொன்றை தமக்குக் கீழால் தொடர்ந்தும் வைத்துக் கொள்ளவே அவர்கள் ஆசைப்படுகின்றனர். ஏகத்துவத்துக்கெதிரான அவர்களது மறுப்பின் பின்னணி சிந்தனை சார்ந்தது என்பதைவிட உளநோய் சார்ந்தது என்பதே பொருத்தம்.
பொதுவாக தலைமைகளது மனோநிலை இதுவாகவே இருக்கிறது. தம்மை ஏனைய மனிதர்களை விட மேலானவர்களாகக் கருதுவதுடன் பொதுமக்களை அடிமை மனோநிலையில் தொடர்ந்தும் வைத்துக் கொண்டு, சுகமான வாழ்வொன்றையே யாசிக்கின்றனர். தன்னை கேள்வி கேட்கும் மக்களை அதிகாரங்கள் மெதுமெதுவாக அந்நியப்படுத்தும். வழிகெடுக்கும் தலைமை நூஹ் நபி எதிர்கொண்ட மிக முக்கிய சவாலாக இருந்தது. இத்தலைமைகள் மக்களை தம் அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொள்ள கையாண்ட உத்தி பாரம்பரியமாக பின்பற்றி வந்த கடவுளர்களை விட்டுவிட வேண்டாம் என்ற உபதேசமாகவே இருந்தது. பொதுவாக, தூது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களுள் ஒன்றாகவும் இது உள்ளது. மூதாதையர்கள் பின்பற்றியது, பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றியது போன்ற வாதங்களால் தூதின் மையக் கருத்துகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்கலாம்.
சூறாவின் கடைசிப் பகுதி சிந்தனை மற்றும் நடத்தைப் பிறழ்வின் உச்ச கட்டத்தை அடைந்த சமூகத்தின் விடிவில் நிராசை அடைந்த நூஹ் நபி புதியதொரு பரம்பரையை உருவாக்குவதே தீர்வு என்ற முடிவுக்கு வருகிறார். வழிகேட்டில் மூழ்கியிருந்த சமூகம் தனது பரம்பரையையும் வழிகெடுத்துவிடும் எனக் கருதுகிறார். அடுத்த பரம்பரை மீது கொண்ட அன்பு காரணமாக தான் இவ்வளவு காலம் நேர்வழிக்கு கொண்டு வர பாடுபட்ட சமூகத்துக்கெதிராக கடுமையாகப் பிரார்த்திக்கிறார்.